பெரிய திருமொழி
எட்டாம் பத்து
ஏழாம் திருமொழி
வியமுடை விடையினம், உடைதர மடமகள் *
குயமிடை, தடவரை அகலம துடையவர் *
நயமுடை நடை அனம், இளையவர் நடை பயில் *
கயமிடை கணபுரம், அடிகள் தம் இடமே. 8.7.1 திருக்கண்ணபுரம்
இணைமலி மருதினொடு, எருதிற இகல் செய்து *
துணைமலி முலையவள், மணமிகு கலவியுள் *
மணமலி விழவினொடு, அடியவ ரளவிய *
கணமலி கணபுரம், அடிகள் தம் இடமே. 8.7.2 திருக்கண்ணபுரம்
புயலுறு வரை மழை, பொழிதர * மணிநிரை
மயலுற, வரை குடை எடுவிய நெடியவர் *
முயல்துளர் மிளை முயல் துள, வளவிளை வயல் *
கயல் துளு கணபுரம், அடிகள் தம் இடமே. 8.7.3 திருக்கண்ணபுரம்
ஏதலர் நகை செய, இளையவ ரளை வெணெய் *
போது செய்து அமரிய, புனிதர் * நல் விரை மலர்
கோதிய மதுகரம் குலவிய மலர் மகள் *
காதல் செய் கணபுரம், அடிகள் தம் இடமே. 8.7.4 திருக்கண்ணபுரம்
தொண்டரும் அமரரும், முனிவரும் தொழுதெழ *
அண்டமொடு, அகலிடம் அளந்தவர் * அமர் செய்து
விண்டவர் பட, மதிள் இலங்கை முன் எரியெழக் *
கண்டவர் கணபுரம், அடிகள் தம் இடமே. 8.7.5 திருக்கண்ணபுரம்
மழுவியல் படையுடை யவனிடம், மழைமுகில் *
தழுவிய உருவினர், திருமகள் மருவிய *
கொழுவிய செழுமலர் முழுசிய, பறவை பண்
எழுவிய கணபுரம், அடிகள் தம் இடமே. 8.7.6 திருக்கண்ணபுரம்
பரிதியொடு அணிமதி, பனிவரை திசை நிலம் *
எரிதியொடென, இன இயல்வினர் செலவினர் *
சுருதியொடு, அருமறை முறை சொலும் அடியவர் *
கருதிய கணபுரம், அடிகள் தம் இடமே. 8.7.7 திருக்கண்ணபுரம்
படி புல்கும் அடியிணை, பலர் தொழ * மலர் வைகு
கொடி புல்கு, தடவரை யகலம துடையவர் *
முடி புல்கு நெடு வயல், படை செல அடி மலர் *
கடி புல்கு கணபுரம், அடிகள் தம் இடமே. 8.7.8 திருக்கண்ணபுரம்
புலமனு மலர் மிசை, மலர் மகள் புணரிய *
நிலமகளென, இன மகளிர்க ளிவரொடும் *
வலமனு படையுடை மணிவணர், நிதி குவை *
கலமனு கணபுரம், அடிகள் தம் இடமே. 8.7.9 திருக்கண்ணபுரம்
மலிபுகழ், கணபுர முடைய எம் அடிகளை *
வலிகெழு மதிளயல், வயலணி மங்கையர் *
கலியன தமிழிவை, விழுமிய இசையினொடு *
ஒலிசொலும் அடியவர், உறுதுயரிலரே. 8.7.10 திருக்கண்ணபுரம்