பெரிய திருமொழி
எட்டாம் பத்து
எட்டாம் திருமொழி
வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம் * வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்தாமரைக் கண்ணன் *
ஆனாவுருவி லானாயன் அவனை, அம் மா விளை வயலுள் *
கானார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.1 திருக்கண்ணபுரம்
மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு *
இலங்கு சோதி யாரமுதம் எய்துமளவு, ஓராமையாய் *
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனைக் *
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.2 திருக்கண்ணபுரம்
பாராரளவும் முதுமுந்நீர் பரந்த காலம் * வளைமருப்பில்
ஏராருருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றலம்மானைக் *
கூரார் ஆரலிரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும் *
காரார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.3 திருக்கண்ணபுரம்
உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோ னகலம் வெஞ்சமத்துப் *
பிளந்து வளைந்த உகிரானைப் பெருந்தண் செந்நெற் குலை தடிந்து *
களஞ்செய் புறவிற் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.4 திருக்கண்ணபுரம்
தொழுநீர் வடிவின் குறளுருவாய் வந்து தோன்றி மாவலி பால் *
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை *
உழுநீர் வயலுள் பொன் கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் * கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.5 திருக்கண்ணபுரம்
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி * மூவெழு கால்
படியாரரசு களை கட்ட பாழியானை அம்மானைக் *
குடியா வண்டு கொண்டுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் *
கடியார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.6 திருக்கண்ணபுரம்
வையமெல்லாம் உடன்வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி*
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடிகொண்டோட * வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழுந்தண் கானல் மணநாறும் *
கைதை வேலிக் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.7 திருக்கண்ணபுரம்
ஒற்றைக்குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத்தான், தோன்றி*
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பால் செல்ல, வெஞ்சமத்துச்
செற்ற * கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்பக் *
கற்ற மறையோர் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.8 திருக்கண்ணபுரம்
துவரிக் கனிவாய், நிலமங்கை துயர் தீர்ந்துய்யப் * பாரதத்துள்
இவரித்தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை *
உவரியோதம் முத்துந்த ஒருபால் ஒருபாலொண் செந்நெல்
கவரி வீசும் * கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.9 திருக்கண்ணபுரம்
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய்ப் * பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க், கற்கியும்
ஆனான் தன்னைக் * கண்ணபுரத்து அடியன் கலியனொலி செய்த *
தேனாரின் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே. 8.8.10 திருக்கண்ணபுரம்