பெரிய திருமொழி
எட்டாம் பத்து
ஒன்பதாம் திருமொழி
கைம்மான மதயானை இடர் தீர்த்த, கருமுகிலை *
மைம்மான மணியை, அணிகொள் மரதகத்தை *
எம்மானை எம்பிரானை ஈசனை, என் மனத்துள்
அம்மானை * அடியேன் அடைந்துய்ந்து போனேனே. 8.9.1 திருவரங்கம்,
திருக்கண்ணபுரம்
தருமான மழைமுகிலைப், பிரியாது தன்னடைந்தார் *
வருமானம் தவிர்க்கும் மணியை, அணியுருவில்
திருமாலை * அம்மானை அமுதத்தைக், கடல் கிடந்த
பெருமானை * அடியேன் அடைந்துய்ந்து பிழைத்தேனே. 8.9.2 திருவரங்கம்,
திருக்கண்ணபுரம்,
திருப்பாற்கடல்
விடையே ழன்றடர்த்து, வெகுண்டு * விலங்கலுறப்
படையால் ஆழிதட்டப், பரமன் பரஞ்சோதி *
மடையார் நீலம் மல்கும் வயல்சூழ், கண்ணபுர மொன்று
உடையானுக்கு அடியேன் * ஒருவர்க்கு உரியேனோ ? 8.9.3 திருவரங்கம்,
திருக்கண்ணபுரம்
மிக்கானை, மறையாய் விரிந்த விளக்கை * என்னுள்
புக்கானைப், புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத் *
தக்கானைக், கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த *
அக்காரக் கனியை, அடைந்துய்ந்து போனேனே. 8.9.4 திருவரங்கம்,
திருக்கண்ணபுரம்,
திருக்கடிகை (சோளசிங்கபுரம்)
வந்தாய் என் மனத்தே, வந்து நீ புகுந்த பின்னை *
எந்தாய் ! போயறியாய், இதுவே அமையாதோ ? *
கொந்தார் பைம்பொழில் சூழ், குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா ! * உன்னை என்றும், மறவாமை பெற்றேனே. 8.9.5 திருவரங்கம்,
திருக்குடந்தை (கும்பகோணம்),
திருக்கண்ணபுரம்
எஞ்சா வெந்நரகத்து, அழுந்தி நடுங்குகின்றேற்கு *
அஞ்சேலென் றடியேனை, ஆட்கொள்ள வல்லானை *
நெஞ்சே ! நீ நினையாது, இறைப் பொழுதும் இருத்தி கண்டாய் *
மஞ்சார் மாளிகை சூழ், வயலாலி மைந்தனையே. 8.9.6 திருவரங்கம்,
திருக்கண்ணபுரம்,
திருவாலி
பெற்றார் பெற்றொழிந்தார், பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் * வளர்த்து, என்னுயிராகி நின்றானை *
முற்றா மாமதி கோள் விடுத்தானை, எம்மானை *
எத்தால் யான் மறக்கேன்? இதுசொல் என் ஏழை நெஞ்சே ! 8.9.7 திருவரங்கம்,
திருக்கண்ணபுரம்
கற்றார் பற்றறுக்கும், பிறவிப் பெருங்கடலே *
பற்றா வந்து அடியேன் பிறந்தேன், பிறந்த பின்னை *
வற்றாநீர் வயல்சூழ், வயலாலி யம்மானைப்
பெற்றேன் * பெற்றதுவும், பிறவாமை பெற்றேனே. 8.9.8 திருவரங்கம்,
திருக்கண்ணபுரம்,
திருவாலி
கண்ணார் கண்ணபுரம், கடிகை கடிகமழும் *
தண்ணார் தாமரைசூழ், தலைச்சங்க மேல் திசையுள் *
விண்ணோர் நாண்மதியை, விரிகின்ற வெஞ்சுடரைக் *
கண்ணாரக் கண்டு கொண்டு, களிக்கின்றது இங்கு என்று கொலோ? 8.9.9 திருவரங்கம்,
தலைச்சங்கநாண் மதியம்,
திருக்கண்ணபுரம்,
திருக்கடிகை (சோளசிங்கபுரம்)
செருநீர வேல் வலவன், கலிகன்றி மங்கையர் கோன் *
கருநீர் முகில் வண்ணன், கண்ணபுரத்தானை *
இருநீரின் தமிழ், இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர் *
வருநீர் வையம் உய்ய, இவை பாடியாடுமினே. 8.9.10 திருவரங்கம்,
திருக்கண்ணபுரம்