பெரிய திருமொழி
இரண்டாம் பத்து
முதல் திருமொழி
வானவர் தங்கள் சிந்தை போல
என் நெஞ்சமே ! இனிது வந்து * மாதவ
மானவர் தங்கள் சிந்தை
அமர்ந்து உறைகின்ற எந்தை *
கானவரிடு காரகில் புகை,
ஓங்கு வேங்கடம் மேவிய * மாண்குற
ளான அந்தணற்கு, இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.1 திருவேங்கடம் திருப்பதி
உறவு சுற்றம் என்று ஒன்றிலா ஒருவன்
உகந்து, அவர் தம்மை, * மண்மிசைப்
பிறவியே கெடுப்பான்
அது கண்டு என் நெஞ்ச மென்பாய் ! *
குறவர் மாதர்களோடு, வண்டு குறிஞ்சி
மருளிசை பாடும் * வேங்கடத்து
அறவனாயகற்கு, இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.2 திருவேங்கடம் திருப்பதி
இண்டையாயின கொண்டு, தொண்டர்கள்
ஏத்துவார் உறவோடும் * வானிடைக்
கொண்டு போயிடவும்
அதுகண்டு என் நெஞ்ச மென்பாய் ! *
வண்டு வாழ் வடவேங்கடமலை
கோயில் கொண்டு அதனோடும் * மீமிசை
அண்ட மாண்டிருப்பாற்கு
அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.3 திருவேங்கடம் திருப்பதி
பாவி ! யாது செய்தாய் ? என் நெஞ்சமே ! *
பண்டு தொண்டு செய்தாரை, மண்மிசை
மேவி ஆட்கொண்டு போய்
விசும்பேற வைக்கும் எந்தை *
கோவி நாயகன், கொண்டலுந் துயர்
வேங்கடமலை யாண்டு * வானவர்
ஆவியா யிருப்பாற்கு
அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.4 திருவேங்கடம் திருப்பதி
பொங்கு போதியும் பிண்டியும் உடைப்
புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை *
தங்கள் தேவரும் தாங்களுமேயாக
என்நெஞ்சமென்பாய் ! *
எங்கும் வானவர் தானவர் நிறைந்தேத்தும்
வேங்கடம் மேவி நின்றருள் *
அங்கணாயகற்கு, இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.5 திருவேங்கடம் திருப்பதி
துவரி யாடையர் மட்டையர்
சமண் தொண்டர்கள் மண்டியுண்டு, * பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க
என் நெஞ்ச மென்பாய் *
கவரி மாக்கணம் சேரும்,
வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை *
அமர நாயகற்கு, இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.6 திருவேங்கடம் திருப்பதி
தருக்கினால் சமண் செய்து,
சோறு தண்தயிரினால் திரளை * மிடற்றிடை
நெருக்குவா ரலக்கணது கண்டு
என் நெஞ்ச மென்பாய் ! *
மருட்கள் வண்டுகள் பாடும்,
வேங்கடம் கோயில் கொண்டதனோடும் * வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு
அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.7 திருவேங்கடம் திருப்பதி
சேயன் அணியன் சிறியன் பெரியன்
என்பதும், சிலர் பேசக்கேட்டிருந்
தே * என் நெஞ்ச மென்பாய் !
எனக்கு ஒன்று சொல்லாதே *
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி
வேங்கட மலை கோயில் மேவிய *
ஆயர் நாயகற்கு, இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.8 திருவேங்கடம் திருப்பதி
கூடியாடி உரைத்ததே உரைத்தாய்
என் நெஞ்சமென்பாய் ! துணிந்து கேள் *
பாடியாடிப் பலரும்
பணிந்தேத்திக் காண்கிலார் *
ஆடு தாமரையோனும் ஈசனும்
அமரர் கோனும் நின்றேத்தும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு, இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.9 திருவேங்கடம் திருப்பதி
மின்னுமாமுகில்மேவு தண்திருவேங்கடமலை கோயில் மேவிய*
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானைக்*
கன்னிமாமதிள் மங்கையர் கலிகன்றி இன்தமிழாலுரைத்த * இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே. 2.1.10 திருவேங்கடம் திருப்பதி