பெரிய திருமொழி
இரண்டாம் பத்து
இரண்டாம் திருமொழி
காசை யாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர் *
நாசமாக நம்ப வல்ல நம்பி, நம்பெருமான் *
வேயினன்ன தோள்மடவார், வெண்ணெயுண்டான் இவனென்று *
ஏசநின்ற எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே. 2.2.1 திருவெவ்வுள்
தையலாள் மேல் காதல் செய்த, தானவன் வாளரக்கன் *
பொய்யிலாத பொன்முடிகள், ஒன்பதோடொன்றும் * அன்று
செய்த வெம்போர் தன்னில், அங்கோர் செஞ்சரத்தாலுருள *
எய்த எந்தை எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே. 2.2.2 திருவெவ்வுள்
முன்னோர் தூது, வானரத்தின் வாயில் மொழிந்து * அரக்கன்
மன்னூர் தன்னை, வாளியினால் மாள முனிந்து * அவனே
பின்னோர் தூது, ஆதி மன்னர்க்காகிப் * பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான், எவ்வுள் கிடந்தானே. 2.2.3 திருவெவ்வுள்
பந்தணைந்த மெல்விரலாள், பாவை தன் காரணத்தால் *
வெந்திற லேறேழும், வென்ற வேந்தன் விரிபுகழ் சேர் *
நந்தன் மைந்தனாக வாகும், நம்பி நம்பெருமான் *
எந்தை தந்தை தம்பெருமான், எவ்வுள் கிடந்தானே. 2.2.4 திருவெவ்வுள்
பாலனாகி ஞாலமேழு முண்டு, பண்டு ஆலிலை மேல் *
சால நாளும் பள்ளி கொள்ளும், தாமரைக் கண்ணன் எண்ணில் *
நீலமார் வண்டுண்டு வாழும், நெய்த லந்தண் கழனி *
ஏலநாறும் பைம்புறவில், எவ்வுள் கிடந்தானே. 2.2.5 திருவெவ்வுள்
சோத்த நம்பி என்று, தொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும் *
ஆத்தனம்பி, செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம் *
மூத்த நம்பி முக்கணம்பி என்று, முனிவர் தொழுது
ஏத்தும் * நம்பி எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே. 2.2.6 திருவெவ்வுள்
திங்கள் அப்பு, வான் எரி காலாகித் திசைமுகனார் *
தங்களப்பன், சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண் *
தொங்கலப்பு நீள்முடியான், சூழ்கழல் சூட நின்ற *
எங்களப்பன் எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே. 2.2.7 திருவெவ்வுள்
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன் * பூவைவண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன் *
தனியன் சேயன் தானொருவனாகிலும், தன்னடியார்க்கு
இனியன் * எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. 2.2.8 திருவெவ்வுள்
பந்திருக்கும் மெல்விரலாள், பாவை பனிமலராள் *
வந்திருக்கும் மார்வன், நீலமேனி மணிவண்ணன் *
அந்தரத்தில் வாழும், வானோர் நாயகனாயமைந்த *
இந்திரற்கும் தம்பெருமான், எவ்வுள் கிடந்தானே. 2.2.9 திருவெவ்வுள்
இண்டை கொண்டு தொண்டரேற்ற எவ்வுள் கிடந்தானை *
வண்டு பாடும் பைம்புறவில், மங்கையர் கோன் கலியன் *
கொண்ட சீரால் தண்தமிழ் செய்மாலை, ஈரைந்தும் வல்லார் *
அண்டமாள்வது ஆணை, அன்றேல் ஆள்வர் அமருலகே. 2.2.10 திருவெவ்வுள்