பெரிய திருமொழி
இரண்டாம் பத்து
ஆறாம் திருமொழி
நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு * வானவரைப்
பெண்ணாகி, அமுதூட்டும் பெருமானார் * மருவினிய
தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை *
எண்ணாதே இருப்பாரை, இறைப்பொழுதும் எண்ணோமே. 2.6.1 திருக்கடல்மல்லை
பார்வண்ண மடமங்கை, பனிநன் மாமலர்க் கிழத்தி *
நீர்வண்ணன் மார்வத்தில், இருக்கையை முன் நினைந்தவனூர் *
கார்வண்ண முதுமுந்நீர்க், கடல்மல்லைத் தலசயனம் *
ஆர் எண்ணும் நெஞ்சுடையார், அவரெம்மை ஆள்வாரே. 2.6.2 திருக்கடல்மல்லை
ஏனத்தினுருவாகி, நிலமங்கை யெழில் கொண்டான் *
வானத்திலவர் முறையால், மகிழ்ந்தேத்தி வலங்கொள்ளக் *
கானத்தின் கடல்மல்லைத், தலசயனத் துறைகின்ற *
ஞானத்தினொளி யுருவை நினைவார், என் நாயகரே. 2.6.3 திருக்கடல்மல்லை
விண்டாரை வென்று, ஆவி விலங்குண்ண * மெல்லியலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற, வெஞ்சமத்துக்
கண்டாரைக் * கடல்மல்லைத் தலசயனத்து, உறைவாரைக் *
கொண்டாடும் நெஞ்சுடையார், அவர் எங்கள் குலதெய்வமே. 2.6.4 திருக்கடல்மல்லை
பிச்சச் சிறுபீலிச், சமண் குண்டர் முதலாயோர் *
விச்சைக்கிறை யென்னும், அவ்விறையைப் பணியாதே *
கச்சிக் கிடந்தவனூர், கடல்மல்லைத் தலசயனம் *
நச்சித் தொழுவாரை, நச்சு என்தன் நல் நெஞ்சே ! 2.6.5 திருவெ:கா,
திருக்கடல்மல்லை
புலங்கொள் நிதிக்குவையோடு, புழைக்கைம்மா களிற்றினமும் *
நலங்கொள் நவமணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து *
கலங்கள் இயங்கும் மல்லைக், கடல்மல்லைத் தலசயனம் *
வலங்கொள் மனத்தாரவரை, வலங்கொள் என் மடநெஞ்சே. 2.6.6 திருக்கடல்மல்லை
பஞ்சிச் சிறுகூழை, உருவாகி * மருவாத
வஞ்சப் பெண் நஞ்சுண்ட, அண்ணல் * முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவனூர், கடல்மல்லைத் தலசயனம் *
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய் நெஞ்சே ! 2.6.7 திருக்கடல்மல்லை
செழுநீர் மலர்க் கமலம், திரையுந்து வன்பகட்டால் *
உழுநீர் வயலுழவர் உழப், பின் முன் பிழைத்தெழுந்த *
கழுநீர்க் கடிகமழும், கடல்மல்லைத் தலசயனம் *
தொழுநீர் மனத்தவரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே ! 2.6.8 திருக்கடல்மல்லை
பிணங்களிடு காடதனுள், நடமாடு பிஞ்ஞகனோடு *
இணங்கு திருச்சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் * விசும்பில்
கணங்களியங்கும் மல்லைக், கடல்மல்லைத் தலசயனம் *
வணங்கும் மனத்தாரவரை, வணங்கென்தன் மடநெஞ்சே ! 2.6.9 திருக்கடல்மல்லை
கடிகமழும் நெடுமறுகில், கடல்மல்லைத் தலசயனத்து *
அடிகளடியே நினையும், அடியவர்கள்தம் அடியான் *
வடிகொள் நெடுவேல் வலவன், கலிகன்றி ஒலிவல்லார் *
முடிகொள் நெடுமன்னவர்தம், முதல்வர் முதலாவாரே. 2.6.10 திருக்கடல்மல்லை