பெரிய திருமொழி
இரண்டாம் பத்து
ஏழாம் திருமொழி
திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை
செழுங்கடலமுதினிற் பிறந்த
அவளும் * நின்னாகத்திருப்பதும் அறிந்தும்
ஆகிலும் ஆசை விடாளால் *
குவளையங்கண்ணி கொல்லியம்பாவை
சொல்லு, நின்தாள் நயந்திருந்த
இவளை * உன்மனத்தால் என் நினைந்திருந்தாய் ?
இடவெந்தை எந்தை பிரானே ! 2.7.1 திருவிடைவெந்தை
துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள்
துணைமுலை சாந்துகொண்டு அணியாள் *
குளம்படு குவளைக் கண்ணிணை எழுதாள்
கோலநன்மலர் குழற்கு அணியாள் *
வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த
மாலென்னும், மாலின மொழியாள் *
இளம்படி யிவளுக்கு என் நினைந்திருந்தாய்?
இடவெந்தை எந்தை பிரானே ! 2.7.2 திருவிடைவெந்தை
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்
தடமுலைக்கு அணியிலும் தழலாம் *
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்
பொருகடல் புலம்பிலும் புலம்பும் *
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னும்
வளைகளும் இறை நில்லா * என்தன்
ஏந்திழை யிவளுக்கு என் நினைந்திருந்தாய் ?
இடவெந்தை எந்தை பிரானே ! 2.7.3 திருவிடைவெந்தை
ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும்
ஒண்சுடர் துயின்றதாலென்னும் *
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா
தென்றலும் தீயினிற் கொடிதாம் *
தோழி ஓ ! என்னும் துணைமுலை அரக்கும்
சொல்லுமின் என்செய்கேன் ? என்னும் *
ஏழையென் பொன்னுக்கு என் நினைந்திருந்தாய்?
இடவெந்தை எந்தை பிரானே ! 2.7.4 திருவிடைவெந்தை
ஓதிலும் உன் பேரன்றி மற்றோதாள்
உருகும் நின் திருவுரு நினைந்து *
காதன்மை பெரிது கையறவுடையள்
கயல் நெடுங்கண் துயில் மறந்தாள் *
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
தெள்ளியள் வள்ளி நுண்மருங்குல் *
ஏதலர் முன்னா என் நினைந்திருந்தாய் ?
இடவெந்தை எந்தை பிரானே ! 2.7.5 திருவிடைவெந்தை
தன்குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்
தடங்கடல் நுடங்கெயில் இலங்கை *
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த
வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் *
மின்கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி
மென்முலை பொன் பயந்திருந்த *
என் கொடி இவளுக்கு என் நினைந்திருந்தாய்?
இடவெந்தை எந்தை பிரானே ! 2.7.6 திருவிடைவெந்தை
உளங்கனிந்திருக்கும் உன்னையே பிதற்றும்
உனக்கன்றி எனக்கு அன்பொன்றிலளாள் *
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை
மாயனே ! என்று வாய் வெருவும் *
களங்கனி முறுவல் காரிகை, பெரிது
கவலையோடு அவலம் சேர்ந்திருந்த *
இளங்கனி இவளுக்கு என் நினைந்திருந்தாய்?
இடவெந்தை எந்தை பிரானே ! 2.7.7 திருமாலிருஞ்சோலை,
திருவிடைவெந்தை
அலங்கெழு தடக்கை ஆயன் வாயாம்பற்கு
அழியுமால் என் உள்ளம் என்னும் *
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்
போதுமோ நீர்மலைக்கு? என்னும் *
குலங்கெழு கொல்லி கோமளவல்லிக்
கொடியிடை நெடுமழைக் கண்ணி *
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்திருந்தாய் ?
இடவெந்தை எந்தை பிரானே ! 2.7.8 திருப்புட்குழி,
திருநீர்மலை,
திருவிடைவெந்தை
பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்
பொருகயல் கண்துயில் மறந்தாள் *
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது
என்னணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் *
மின்குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி
வீங்கிய வனமுலையாளுக்கு *
என்கொலாம்? குறிப்பில் என் நினைந்திருந்தாய்?
இடவெந்தை எந்தை பிரானே! 2.7.9 திருவிடைவெந்தை
அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
ஆய, எம்மாயனே ! அருளாய்
என்னும் * இன்தொண்டர்க்கு இன்னருள் புரியும்
இடவெந்தை எந்தை பிரானை *
மன்னு மாமாட மங்கையர் தலைவன்
மானவேல் கலியன் வாயொலிகள் *
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறுப்பாரே. 2.7.10 திருவிடைவெந்தை