பெரிய திருமொழி
மூன்றாம் பத்து
முதல் திருமொழி
இருந்தண்மா நிலம் ஏனமதாய்
வளைமருப்பினில் அகத்தொடுக்கிக் *
கருந்தண்மா கடல் கண் துயின்றவனிடம்
கமல நன் மலர்த்தேறல்
அருந்தி * இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளி அம்பொழிலூடே *
செருந்தி நாண்மலர் சென்றணைந்து உழிதரு
திருவயிந்திரபுரமே. 3.1.1 திருவயிந்திரபுரம்
மின்னும் ஆழியங்கையவன்
செய்யவளுறைதரு திருமார்பன் *
பன்னு நால்மறைப் பல் பொருளாகிய
பரனிடம் * வரைச்சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில்
பெடைவரப் பிணியவிழ் கமலத்துத் *
தென்னவென்று வண்டு இன்னிசை முரல்தரு
திருவயிந்திரபுரமே. 3.1.2 திருவயிந்திரபுரம்
வையமேழுமுண்டு, ஆலிலை
வைகிய மாயவன் * அடியவர்க்கு
மெய்யனாகிய, தெய்வநாயகனிடம் *
மெய்தகு வரைச்சாரல் *
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய
முல்லையங் கொடியாடச் *
செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு
திருவயிந்திரபுரமே. 3.1.3 திருவயிந்திரபுரம்
மாறு கொண்டு உடன்றெதிர்ந்த வல்லவுணன்தன்
மார்பகம் இருபிளவாக்
கூறு கொண்டு * அவன் குலமகற்கு
இன்னருள் கொடுத்தவனிடம் * மிடைந்து
சாறு கொண்ட மென்கரும் பிளங்கழை
தகை விசும்புற மணிநீழல் *
சேறு கொண்ட தண்பழனம தெழில் திகழ்
திருவயிந்திரபுரமே. 3.1.4 திருவயிந்திரபுரம்
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
அகலிடமளந்து * ஆயர்
பூங்கொடிக்கு, இனவிடை பொருதவனிடம் *
பொன்மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில்,
குதிகொடு குரக்கினம் இரைத்தோடித் *
தேன் கலந்த தண்பலங்கனி நுகர்தரு
திருவயிந்திரபுரமே. 3.1.5 திருவயிந்திரபுரம்
கூனுலாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்து
இளங்கொடியோடும்
கானுலாவிய * கருமுகில்
திருநிறத்தவனிடம் * கவினாரும்
வானுலாவிய மதிதவழ் மால்வரை
மாமதிள் புடை சூழத் *
தேனுலாவிய செழும் பொழில் தழுவிய
திருவயிந்திரபுரமே. 3.1.6 திருவயிந்திரபுரம்
மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்
விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் * நீள்முடி பொடி செய்த மைந்தனதிடம்
மணிவரை நீழல் *
அன்ன மாமல ரரவிந்தத் தமளியில்
பெடையொடும் இனிதமரச் *
செந்நெலார் கவரிக் குலைவீசு
தண் திருவயிந்திரபுரமே. 3.1.7 திருவயிந்திரபுரம்
விரை கமழ்ந்த மென் கருங்குழல் காரணம்
வில்லிறுத்து * அடல் மழைக்கு
நிரை கலங்கிட, வரை குடையெடுத்தவன்
நிலவிய இடம் * தடமார்
வரை வளம் திகழ் மதகரி மருப்பொடு
மலை வளரகிலுந்தித் *
திரை கொணர்ந்தணை செழுநதி வயல் புகு
திருவயிந்திரபுரமே. 3.1.8 திருவயிந்திரபுரம்
வேல்கொள் கைத்தலத்து அரசர் வெம்போரினில்
விசயனுக்காய் * மணித்தேர்
கோல்கொள் கைத்தலத்து எந்தை பெம்மானிடம்
குலவு தண் வரைச்சாரல் *
கால்கொள் கண்கொடிக் கையெழக்
கமுகிளம் பாளைகள் கமழ் சாரல் *
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு
திருவயிந்திரபுரமே. 3.1.9 திருவயிந்திரபுரம்
மூவராகிய ஒருவனை மூவுலகுண்டு உமிழ்ந்து அளந்தானைத்*
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை * வேல் வலவன் கலிகன்றி, விரித்துரைத்த *
பாவு தண்தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே. 3.1.10 திருவயிந்திரபுரம்