பெரிய திருமொழி
மூன்றாம் பத்து
ஐந்தாம் திருமொழி
வந்து உனதடியேன் மனம் புகுந்தாய்
புகுந்ததற்பின் வணங்கும் * என்
சிந்தனைக்கு இனியாய் ! திருவே ! என்னாருயிரே ! *
அந்தளிர் அணியார் அசோகின்
இளந்தளிர்கள் கலந்து * அவை எங்கும்
செந்தழல் புரையும் திருவாலியம்மானே. 3.5.1 திருவாலி
நீலத்தடவரை மாமணி நிகழக் கிடந்தது போல் * அரவணை
வேலைத் தலைக் கிடந்தாய் ! அடியேன் மனத்திருந்தாய் *
சோலைத் தலைக் கணமாமயில் நடமாட
மழை முகில் போன்றெழுந்து * எங்கும்
ஆலைப்புகை கமழும் அணியாலியம்மானே. 3.5.2 திருவாலி,
திருப்பாற்கடல்
நென்னல் போய் வருமென்றென்று
எண்ணி யிராமை, என் மனத்தே புகுந்தது *
இம்மைக் கென்றிருந்தேன் எறிநீர் வளஞ்செறுவில் *
செந்நெற் கூழை வரம்பொரீஇ
அரிவார் முகத்தெழு வாளை போய் * கரும்பு
அந்நற் காடு அணையும் அணியாலியம்மானே. 3.5.3 திருவாலி
மின்னின் மன்னு நுடங்கிடை
மடவார்தம் சிந்தை மறந்து வந்து * நின்
மன்னு சேவடிக்கே, மறவாமை வைத்தாயால் *
புன்னை மன்னு செருந்தி, வண்பொழில்
வாய் அகன் பணைகள் கலந்து * எங்கும்
அன்னம் மன்னும் வயல் அணியாலி அம்மானே. 3.5.4 திருவாலி
நீடு பல்மலர் மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்தும் *
என் மனம் வாட நீ நினையேல் மரமெய்த மாமுனிவா ! *
பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல்பணையால் மலிந்து * எங்கும்
ஆடலோசை யறா அணியாலியம்மானே. 3.5.5 திருவாலி
கந்தமாமலரெட்டும் இட்டு, நின் காமர்சேவடி கைதொழுதெழும் *
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன் *
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும் *
அந்தணாளர் அறா ! அணியாலியம்மானே ! 3.5.6 திருவாலி
உலவு திரைக்கடல் பள்ளிகொண்டு
உவந்து உன்னடியேன் மனம் புகுந்த * அப்
புலவ ! புண்ணியனே ! புகுந்தாயைப் போகலொட்டேன் *
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்
தண்தாமரை மலரின் மிசை * மலி
அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே ! 3.5.7 திருவாலி,
திருப்பாற்கடல்
சங்கு தங்கு தடங்கடல்
கடல்மல்லையுள் கிடந்தாய் ! * அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் ! இனிப் போயினால் அறையோ ! *
கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி
இன்னிள வண்டுபோய் * இளந்
தெங்கின் தாதளையும் திருவாலியம்மானே ! 3.5.8 திருவாலி,
திருக்கடல்மல்லை
ஓதி ஆயிரநாமமும் பணிந்தேத்தி
நின் அடைந்தேற்கு * ஒரு பொருள்
வேதியா ! வரையா ! உரையாய் ஒரு மாற்றம் எந்தாய் ! *
நீதியாகிய வேதமாமுனியாளர்
தோற்றம் உரைத்து * மற்றவர்க்கு
ஆதியாயிருந்தாய் ! அணியாலியம்மானே ! 3.5.9 திருவாலி,
திருவேங்கடம் திருப்பதி
புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ்
தென்னாலியிருந்த மாயனைக் *
கல்லின் மன்னு திண்தோள் கலியன் ஒலிசெய்த *
நல்ல இன்னிசை மாலை
நாலு மோரைந்து மொன்றும் நவின்று * தாம் உடன்
வல்லரா யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே. 3.5.10 திருவாலி