பெரிய திருமொழி
மூன்றாம் பத்து
ஏழாம் திருமொழி
கள்வன்கொல்? யான் அறியேன் கறியான் ஒருகாளை வந்து *
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப், போதவென்று *
வெள்ளி வளைக் கை பற்றப், பெற்ற தாயரை விட்டகன்று *
அள்ளலம் பூங்கழனி, அணியாலி புகுவர் கொலோ ? 3.7.1 திருவாலி
பண்டிவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து * என் மகள் தன்,
தொண்டையஞ் செங்கனிவாய், நுகர்ந்தானை யுகந்து * அவன்பின்
கெண்டை யொண்கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து *
வண்டமர் கானல் மல்கும், வயலாலி புகுவர் கொலோ ? 3.7.2 திருவாலி
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய்! அரக்கர் குலப்பாவை தன்னை*
வெஞ்சின மூக்கரிந்த விறலோன், திறம் கேட்கில் * மெய்யே
பஞ்சிய மெல்லடி, எம் பணைத் தோளி பரக்கழிந்து *
வஞ்சியந் தண்பணை சூழ், வயலாலி புகுவர் கொலோ ? 3.7.3 திருவாலி
ஏது அவன் தொல்பிறப்பு ? இளையவன் வளையூதி * மன்னர்
தூதுவனா யவனூர் சொல்லுவீர்கள் ! சொல்லீர் அறியேன் *
மாதவன்தன் துணையா நடந்தாள், தடம்சூழ் புறவில் *
போது வண்டாடு செம்மல், புனலாலி புகுவர் கொலோ? 3.7.4 திருவாலி
தாய் எனை யென்றிரங்காள், தடந்தோளி தனக்கமைந்த *
மாயனை மாதவனை மதித்து, என்னை அகன்ற இவள் *
வேயன தோள் விசிறிப், பெடை யன்னமென நடந்து *
போயின பூங்கொடியாள், புனலாலி புகுவர் கொலோ ? 3.7.5 திருவாலி
என்துணை யென்றெடுத்தேற்கு இறையேனு மிரங்கிற்றிலள் *
தன் துணையாய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் *
வன்துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் *
இன்துணைவன் னொடும் போய் எழிலாலி புகுவர் கொலோ ? 3.7.6 திருவரங்கம்,
திருவாலி
அன்னையும் அத்தனுமென்று, அடியோமுக் கிரங்கிற்றிலள் *
பின்னைதன் காதலன்தன் பெருந்தோள் நலம் பேணினளால் *
மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து *
புன்னையும் அன்னமும் சூழ், புனலாலி புகுவர் கொலோ ? 3.7.7 திருவாலி
முற்றிலும் பைங்கிளியும், பந்தும் ஊசலும் பேசுகின்ற *
சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற செழுங்கோதை தன்னைப்
பெற்றிலேன் * முற்றிழையைப், பிறப்பிலி பின்னே நடந்து *
மற்றெல்லாம் கைதொழப் போய், வயலாலி புகுவர் கொலோ ? 3.7.8 திருவாலி
காவியங்கண்ணி எண்ணில் கடிமாமலர்ப் பாவை யொப்பாள் *
பாவியேன் பெற்றமையால், பணைத்தோளி பரக்கழிந்து *
தூவிசேர் அன்னமன்ன நடையாள் நெடுமாலொடும் போய் *
வாவியந் தண்பணைசூழ், வயலாலி புகுவர் கொலோ? 3.7.9 திருவாலி
தாய் மனம் நின்றிரங்கத் தனியே நெடுமால் துணையா *
போயின பூங்கொடியாள், புனலாலி புகுவரென்று *
காய்சின வேல் கலியன் ஒலிசெய், தமிழ் மாலை பத்தும் *
மேவிய நெஞ்சுடையார், தஞ்சமாவது விண்ணுலகே. 3.7.10 திருவாலி