பெரிய திருமொழி
இரண்டாமாயிரம்
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழித் தனியன்கள்
(திருக்கோட்டியூர்நம்பி அருளிச்செய்தது )
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம்
யஸ்யகோபி: ப்ரகாஶாபி: ஆவித்யம்நிஹதம்தம:
(எம்பெருமானார் அருளிச்செய்தது)
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன் வாழியரோ*
மாயோனைவாள்வலியால்மந்திரங்கொள்* மங்கையர்கோன்
தூயோன்சுடர்மானவேல்,
(ஆழ்வான் அருளிச்செய்தது)
நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி
நஞ்சுக்குநல்லவமுதம் தமிழ்நன்னூல் துறைகள்
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம்* பரசமயப்
பஞ்சுக்கனலின் பொறி* பரகாலன்பனுவல்களே.
(எம்பார் அருளிச்செய்தது)
எங்கள் கதியே இராமாநுசமுனியே
சங்கைகெடுத்தாண்டதவராசா – பொங்குபுகழ்
மங்கையர்கோனீந்தமறையாயிரமனைத்தும்
தங்குமனம்நீ எனக்குத்தா.
(மாலைத்தனியேவழிபறிக்கவேணுமென்று * கோலிப்பதிவிருந்தகொற்றவனே!* – வேலை அணைத்தருளுங்கையாலடியேன்வினையை * துணித்தருளவேனும் துணிந்து)
முதல் பத்து
முதல் திருமொழி
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் * கூடி இளையவர் தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் * ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திறந்து *#
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 1.1.1
ஆவியே! அமுதே ! என நினைந்துருகி
அவரவர் பணமுலை துணையாப் *
பாவியேன் உணராது எத்தனை பகலும்
பழுது போயொழிந்தன நாள்கள் *
தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது, என் * (தேன் முதற்பதிப்பு)
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 1.1.2 திருக்குடந்தை (கும்பகோணம்)
சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
தெரிவைமார் உருவமே மருவி *
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன, கழிந்த அந்நாள்கள் *
காமனார் தாதை நம்முடை யடிகள்
தம்மடைந்தார் மனத்திருப்பார்
நாமம் * நானுய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 1.1.3
வென்றியே வேண்டி வீழ்பொருட்கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி *
நின்றவாநில்லா நெஞ்சினையுடையேன்
என் செய்கேன் ? நெடுவிசும்பணவும்
பன்றியாய் அன்று பாரகங் கீண்ட
பாழியான் ஆழியானருளே *
நன்று நானுய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 1.1.4
கள்வனேனானேன் படிறு செய்திருப்பேன்
கண்டவா திரிதந்தேனேலும் *
தெள்ளியேனானேன் செல்கதிக் கமைந்தேன்
சிக்கெனத் திருவருள் பெற்றேன் *
உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம் கண்ணநீர் சோர *
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணா என்னும் நாமம். 1.1.5
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாழ்நாள் *
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்த எம் அண்ணல் *
வம்புலாம் சோலை மாமதிள், தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி *
நம்பிகாள் ! உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 1.1.6 தஞ்சை மாமணிக் கோயில்
இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்
இன்னதோர் தன்மையென்று உணரீர் *
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்
சொற்பொருளாளீர் * சொல்லுகேன் வம்மின்
சூழ்புனற் குடந்தையே தொழுமின் *
நற்பொருள் காண்மின் பாடி நீருய்ம்மின்
நாராயணா என்னும் நாமம். 1.1.7 திருக்குடந்தை (கும்பகோணம்)
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தைப் *
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தா ருயிர்க்கெல்லாம் *
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
செல்கதிக்கு உய்யுமாறெண்ணி *
நற்றுணையாகப் பற்றினேன் அடியேன்
நாராயணா என்னும் நாமம். 1.1.8
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநில மளிக்கும் *
வலம் தரும் மற்றுந் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும் *
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 1.1.9
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார் வாள் கலிகன்றி *
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை
இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர் ! *
துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம் *
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா என்னும் நாமம். 1.1.10