பெரிய திருமொழி
முதல் பத்து
இரண்டாம் திருமொழி
வாலி மாவலத் தொருவனதுடல் கெட
வரிசிலை வளைவித்து, அன்று *
ஏலம் நாறு தண்தடம் பொழிலிடம் பெற
இருந்த நலிமயத்துள் *
ஆலிமாமுகி லதிர்தர அருவரை
அகடுற முகடேறிப் *
பீலிமா மயில் நடஞ்செயும் தடஞ்சுனைப்
பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.1 திருப்பிரிதி
கலங்க மாக்கடல் அரிகுலம் பணிசெய்ய
அருவரை அணை கட்டி *
இலங்கை மாநகர் பொடி செய்த அடிகள் தாம்
இருந்த நலிமயத்து *
விலங்கல் போல்வன விறலிருஞ் சினத்தன
வேழங்கள் துயர்தீரப் *
பிலங்கொள் வாளெயிற்று, அரியவை திரிதரு
பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.2 திருப்பிரிதி
துடிகொள் நுண்ணிடைச் சுரிகுழல்
துளங்கெயிற் றிளங்கொடி திறத்து * ஆயர்
இடிகொள் வெங்குரலின விடை யடர்த்தவன்
இருந்த நலிமயத்துக் *
கடிகொள் வேங்கையின் நறுமல ரமளியின்
மணியறை மிசை வேழம் *
பிடியினோடு வண்டு இசை சொலத் துயில் கொளும்
பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.3 திருப்பிரிதி
மறங்கொள் ஆளரி யுருவென வெருவர
ஒருவனது அகல் மார்வம்
திறந்து * வானவர் மணிமுடி பணிதர
இருந்த நலிமயத்துள் *
இறங்கி ஏனங்கள் வளை மருப்பிடந்திடக்
கிடந்து அருகெரி வீசும் *
பிறங்கு மாமணி யருவி யொடிழிதரு
பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.4 திருப்பிரிதி
கரை செய் மாக்கடல் கிடந்தவன்
கனைகழல் அமரர்கள் தொழுதேத்த *
அரைசெய் மேகலை அலர்மகளவளொடும்
அமர்ந்த நலிமயத்து *
வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை
அளைமிகு தேன் தோய்த்துப் *
பிரசவாரி தன்னிளம் பிடிக்கு அருள் செயும்
பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.5 திருப்பிரிதி
பணங்களாயிரமுடைய நல்லரவணைப்
பள்ளி கொள் பரமா ! என்று *
இணங்கி வானவர் மணிமுடி பணிதர
இருந்த நலிமயத்து *
மணங்கொள் மாதவி நெடுங்கொடி விசும்புற
நிமிர்ந்தவை முகில் பற்றிப் *
பிணங்கு பூம்பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்
பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.6 திருப்பிரிதி
கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய
கறிவளர் கொடி துன்னிப் *
போர்கொள் வேங்கைகள் புனவரை தழுவிய
பூம்பொழி லிமயத்துள் *
ஏர்கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து
இனமல ரெட்டு மிட்டு இமையோர்கள் *
பேர்களாயிரம் பரவி நின்றடி தொழும்
பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.7 திருப்பிரிதி
இரவு கூர்ந்திருள் பெருகிய வரை முழை
இரும்பசி யதுகூர *
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய
அருவரை யிமயத்துப் *
பரமன் ஆதி எம் பனிமுகில் வண்ணன் என்று
எண்ணி நின்று இமையோர்கள் *
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்
பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.8 திருப்பிரிதி
ஓதி ஆயிர நாமங்க ளுணர்ந்தவர்க்கு
உறு துயரடையாமல் *
ஏதமின்றி நின்றருளும் நம் பெருந்தகை
இருந்த நலிமயத்துத் *
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற
தழல் புரை எழில் நோக்கிப் *
பேதை வண்டுகள் எரியென வெருவரு
பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.9 திருப்பிரிதி
கரிய மாமுகிற் படலங்கள்
கிடந்து அவை முழங்கிடக் * களிறென்று
பெரிய மாசுணம் வரையெனப் பெயர்தரு
பிரிதி யெம்பெருமானை *
வரிகொள் வண்டறை பைம்பொழில்
மங்கையர் கலியனதொலி மாலை *
அரிய இன்னிசை பாடும் நல்லடியவர்க்கு
அருவினை அடையாவே. 1.2.10 திருப்பிரிதி