பெரிய திருமொழி
முதல் பத்து
நான்காம் திருமொழி
ஏனமுனாகி இருநிலமிடந்து
அன்று இணையடி இமையவர் வணங்கத் *
தானவனாகம் தரணியில் புரளத்
தடஞ்சிலை குனித்த என் தலைவன் *
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த
தெய்வ நல் நறுமலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1 வதரியாச்சிராமம்
கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து
கண்டு முன் கொடுந் தொழிலுரவோன் *
ஊனுடை யகலத்து, அடுகணை குளிப்ப
உயிர் கவர்ந்துகந்த எம் ஒருவன் *
தேனுடைக் கமலத்தயனொடு தேவர்
சென்று சென்றிறைஞ்சிட, * பெருகு
வானிடை முதுநீர்க் கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.2 வதரியாச்சிராமம்
இலங்கையும் கடலும் அடலரும் துப்பில்
இருநிதிக் கிறைவனும் * அரக்கர்
குலங்களும் கெட, முன் கொடுந் தொழில்
புரிந்த கொற்றவன் * கொழுஞ் சுடர் சுழன்ற
விலங்கலி லுரிஞ்சி மேல் நின்ற விசும்பில்
வெண்துகிற் கொடியென விரிந்து *
வலந்தருமணி நீர்க் கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.3 வதரியாச்சிராமம்
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே !
தொழுதெழு தொண்டர்கள் தமக்கு *
பிணியொழித்து, அமரர் பெரு விசும்பருளும்
பேரருளாளன் எம்பெருமான் *
அணிமலர்க் குழலார் அரம்பையர், துகிலும்
ஆரமும் வாரி வந்து * அணிநீர்
மணி கொழித்திழிந்த கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.4 வதரியாச்சிராமம்
பேயிடைக் கிருந்து வந்த மற்றவள் தன்
பெருமுலை சுவைத்திடப் * பெற்ற
தாயிடைக் கிருத்தல் அஞ்சுவனென்று
தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் *
சேய் முகட்டுச்சி அண்டமும் சுமந்த
செம்பொன் செய் விலங்கலி லிலங்கு *
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.5 வதரியாச்சிராமம்
தேரணங் கல்குல் செழுங்கயற் கண்ணி
திறத்து, ஒரு மறத் தொழில் புரிந்து *
பாரணங்கிமில் ஏறேழும் முன்னடர்த்த
பனிமுகில் வண்ணன் எம்பெருமான் *
காரணந் தன்னால் கடும் புனல் கயத்த
கருவரை பிளவெழக் குத்தி *
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.6 வதரியாச்சிராமம்
வெந்திறல் களிறும் வேலை வாயமுதும்
விண்ணொடு விண்ணவர்க் கரசும் *
இந்திரற் கருளி எமக்கும் ஈந்தருளும்
எந்தை எம்மடிகள் எம்பெருமான் *
அந்தரத்து அமரர் அடியிணை வணங்க
ஆயிர முகத்தினாலருளி *
மந்தரத் திழிந்த கங்கையின் கரை மேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7 வதரியாச்சிராமம்
மான் முனிந்து ஒரு கால் வரிசிலை வளைத்த
மன்னவன், பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து * அவனதுடல் இரு பிளவா
உகிர் நுதி மடுத்து * அயன் அரனைத்
தான் முனிந்திட்ட, வெந்திறல் சாபம்
தவிர்த்தவன் * தவம் புரிந்துயர்ந்த
மாமுனி கொணர்ந்த கங்கையின் கரை மேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.8 வதரியாச்சிராமம்
கொண்டல் மாருதங்கள், குலவரை தொகுநீர்க்
குரை கடலுலகுடன் அனைத்தும் *
உண்டமா வயிற்றோன் ஒண்சுடரேய்ந்த
உம்பரும் ஊழியுமானான் *
அண்ட மூடறுத்து அன்று அந்தரத் திழிந்து
அங்கு அவனியாள் அலமரப் * பெருகும்
மண்டு மாமணி நீர்க் கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.9 வதரியாச்சிராமம்
வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை *
கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக்
கலியன் வாயொலி செய்த பனுவல் *
வரஞ் செய்த ஐந்துமைந்தும் வல்லார்கள்
வானவருலகுடன் மருவி *
இருங்கடலுலகம் ஆண்டு வெண்குடைக்கீழ்
இமையவராகுவர் தாமே. 1.4.10 வதரியாச்சிராமம்