பெரிய திருமொழி
முதல் பத்து
ஐந்தாம் திருமொழி
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்ச் *
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து*
மலைகொண்டு அலைநீர் அணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர்
தலைவன்*தலைபத்து அறுத்துகந்தான் சாளக்கிராமம் அடைநெஞ்சே! 1.5.1 சாளக்கிராமம்
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலிமாந் தேரும் காலாளும் *
உடன் சூழ்ந்தெழுந்த கடியிலங்கை பொடியா வடிவாய்ச்சரம் துரந்தான்*
இடம்சூழ்ந்து எங்கும் இருவிசும்பில் இமையோர் வணங்கமணங்கமழும்
தடம் சூழ்ந்து * எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே ! 1.5.2 சாளக்கிராமம்
உலவு திரையும் குலவரையும் ஊழி முதலா எண்திக்கும் *
நிலவும் சுடரும் இருளுமாய், நின்றான் வென்றி விறலாழி
வலவன் * வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் * சலம் சூழ்ந்தழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே ! 1.5.3 சாளக்கிராமம்
ஊரான் குடந்தை உத்தமன் ஒருகால் இருகால் சிலைவளையத் *
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் * வற்றா வருபுனல் சூழ்
பேரான் * பேராயிரமுடையான் பிறங்கு சிறைவண்டு அறைகின்ற
தாரான் * தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே ! 1.5.4 திருப்பேர்நகர்,
திருக்குடந்தை (கும்பகோணம்),
ஊரகம்,
சாளக்கிராமம்
அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்குஅயில்வாளால்
விடுத்தான்* விளங்கு சுடராழி விண்ணோர் பெருமான் * நண்ணார்முன்
கடுத்தார்த்தெழுந்த பெருமழையைக் கல்லொன்றேந்தி இனநிரைக்காத்
தடுத்தான் * தடம் சூழ்ந்தழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே ! 1.5.5 சாளக்கிராமம்
தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் இழுதும் உடனுண்ட
வாயான் * தூய அரியுருவில் குறளாய்ச் சென்று மாவலியை
ஏயானிரப்ப * மூவடி மண் இன்றே தாவென்று, உலகேழும்
தாயான் * காயாமலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே ! 1.5.6 சாளக்கிராமம்
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை *
ஊனாரகலம் பிளவெடுத்த ஒருவன் தானே * இருசுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய், மலையாய் அலைநீர் உலகனைத்தும்
தானாய்த் * தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே ! 1.5.7 சாளக்கிராமம்
வெந்தாரென்பும் சுடுநீறும் மெய்யில் பூசிக் கையகத்து, * ஓர்
சந்தார்தலைகொண்டு, உலகேழும் திரியும் பெரியோன்தான்சென்று*என்
எந்தாய் ! சாபம் தீரென்ன இலங்கு அமுது நீர் திருமார்வில்
தந்தான் * சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே ! 1.5.8 சாளக்கிராமம்
தொண்டாமினமும் இமையோரும் துணைநூல்மார்வினந்தணரும்*
அண்டா ! எமக்கே அருளாயென்று அணையும் கோயிலருகெல்லாம் *
வண்டார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாயத் *
தண்தாமரைகள் முகமலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே ! 1.5.9 சாளக்கிராமம்
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளைக் *
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை *
ஆரார் உலகத் தறிவுடையார் அமரர் நல் நாட்டரசாளப் *
பேராயிரமும் ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே. 1.5.10 சாளக்கிராமம்