பெரிய திருமொழி
முதல் பத்து
எட்டாம் திருமொழி
கொங்கலர்ந்த மலர்க்குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் *
சங்கு தங்கு தடங்கடல், துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் *
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் * பொங்குநீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத், திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.1 திருவேங்கடம் திருப்பதி
பள்ளியாவது, பாற்கடல் அரங்கம் * இரங்க வன்பேய் முலை
பிள்ளையா யுயிருண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம் *
வெள்ளியான் கரியான், மணிநிறவண்ணன் என்றெண்ணி *நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.2 திருவரங்கம்,
திருவேங்கடம் திருப்பதி,
திருப்பாற்கடல்
நின்ற மாமருது இற்று வீழ, நடந்த நின்மலன் நேமியான் *
என்றும் வானவர் கைதொழும் இணைத் தாமரையடி யெம்பிரான் *
கன்றி மாரி பொழிந்திடக் கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான் *
சென்று குன்றமெடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.3 திருவேங்கடம் திருப்பதி
பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய்திட்டு, வென்றபரஞ்சுடர்*
கோத்து அங்கு ஆயர்தம்பாடியில் குரவை பிணைந்த எம்கோவலன் *
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான் *
தீர்த்த நீர்த்தடம் சோலைசூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.4 திருவிடைவெந்தை,
திருவேங்கடம் திருப்பதி,
திருவாய்ப்பாடி (கோகுலம்)
வண்கையான்அவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய்*
மண் கையால் இரந்தான், மராமரமேழும் எய்த வலத்தினான் *
எண்கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய எம்பிரான் *
திண்கைம்மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.5 திருமாலிருஞ்சோலை,
திருவேங்கடம் திருப்பதி,
திருப்பிரிதி
எண்திசைகளும் ஏழுலகமும் வாங்கிப் பொன்வயிற்றில் பெய்து *
பண்டுஓர்ஆலிலைப் பள்ளிகொண்டவன் பால்மதிக்கு இடர்தீர்த்தவன் *
ஒண்திற லவுணன் உரத்துகிர் வைத்தவன் ஒள்ளெயிற்றொடு *
திண்திற லரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.6 திருவேங்கடம் திருப்பதி
பாரும் நீர் எரி காற்றினொடு ஆகாசமும் இவையாயினான் *
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம் *
காரும் வார்பனி நீள் விசும்பிடைச் சோருமாமுகில் தோய்தரச் *
சேரும் வார்பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.7 திருவேங்கடம் திருப்பதி
அம்பரம் அனல் கால் நிலம் சலமாகி நின்ற, அமரர் கோன் *
வம்புலா மலர்மேல், மலிமட மங்கை தன் கொழுநனவன் *
கொம்பினன்ன இடை மடக்குற மாதர் நீள் இதணந்தொறும் *
செம்புனம் மவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.8 திருவேங்கடம் திருப்பதி
பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று பின்னரும் *
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் *
வாசமா மலர் நாறுவார் பொழில் சூழ்தரும் உலகுக்கெல்லாம் *
தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1.8.9 திருவேங்கடம் திருப்பதி
செங்கயல் திளைக்கும்சுனைத் திருவேங்கடத்துஉறைசெல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்தமிழ்ச் செஞ்சொல் மாலைகள் *
சங்கை யின்றித் தரித்துரைக்க வல்லார்கள், தஞ்சமதாகவே *
வங்கமா கடல் வையம் காவலராகி வானுலகாள்வரே. 1.8.10 திருவேங்கடம் திருப்பதி