பெரிய திருமொழி
நான்காம் பத்து
ஏழாம் திருமொழி
கண்ணார் கடல்போல், திருமேனி கரியாய் ! *
நண்ணார் முனை வென்றி கொள்வார், மன்னு நாங்கூர் *
திண்ணார் மதிள்சூழ், திருவெள்ளக்குளத்துள்
அண்ணா ! * அடியேனிடரைக், களையாயே. 4.7.1 திருவெள்ளக்குளம்
கொந்தார் துளவ மலர் கொண்டு, அணிவானே ! *
நந்தாத பெரும் புகழ், வேதியர் நாங்கூர் *
செந்தாமரை நீர்த், திருவெள்ளக்குளத்துள்
எந்தாய் ! * அடியேனிடரைக், களையாயே. 4.7.2 திருவெள்ளக்குளம்
குன்றால், குளிர்மாரி தடுத்து உகந்தானே ! *
நன்றாய பெரும்புகழ், வேதியர் நாங்கூர் *
சென்றார் வணங்கும், திருவெள்ளக்குளத்துள்
நின்றாய் ! * நெடியாய் !, அடியேனிடர் நீக்கே. 4.7.3 திருவெள்ளக்குளம்
கானார் கரி கொம்பது ஒசித்த, களிறே ! *
நானா வகை நல்லவர், மன்னிய நாங்கூர் *
தேனார் பொழில் சூழ், திருவெள்ளக்குளத்து
ளானாய் ! * அடியேனுக்கு, அருள் புரியாயே. 4.7.4 திருவெள்ளக்குளம்
வேடார், திருவேங்கடம் மேய விளக்கே ! *
நாடார் புகழ் வேதியர், மன்னிய நாங்கூர் *
சேடார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் ! *
பாடா வருவேன், வினையாயின பாற்றே. * 4.7.5 திருவெள்ளக்குளம்,
திருவேங்கடம் திருப்பதி
கல்லால் கடலை அணை கட்டி, உகந்தாய் ! *
நல்லார் பலர், வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா ! * திருவெள்ளக்குளத்து, உறைவானே ! *
எல்லா இடரும், கெடுமாறு அருளாயே. 4.7.6 திருவெள்ளக்குளம்
கோலால் நிரை மேய்த்த, எங்கோவலர் கோவே ! *
நாலாகிய வேதியர், மன்னிய நாங்கூர் *
சேலார் வயல் சூழ், திருவெள்ளக்குளத்துள்
மாலே ! * என வல்வினை, தீர்த்தருளாயே. 4.7.7 திருவெள்ளக்குளம்
வாராகமதாகி, இம்மண்ணை இடந்தாய் ! *
நாராயணனே ! நல்ல வேதியர் நாங்கூர் *
சீரார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆராவமுதே * அடியேற்கு, அருளாயே. 4.7.8 திருவெள்ளக்குளம்
பூவார் திருமாமகள், புல்கிய மார்பா ! *
நாவார் புகழ் வேதியர், மன்னிய நாங்கூர்த்
தேவா ! * திருவெள்ளக்குளத்து, உறைவானே ! *
ஆவா ! அடியான் இவனென்று, அருளாயே. 4.7.9 திருவெள்ளக்குளம்
நல்லன்புடை வேதியர், மன்னிய நாங்கூர்ச்
செல்வன் * திருவெள்ளக்குளத்து, உறைவானை *
கல்லின் மலிதோள், கலியன் சொன்ன மாலை *
வல்லரென வல்லவர், வானவர் தாமே. 4.7.10 திருவெள்ளக்குளம்