பெரிய திருமொழி
நான்காம் பத்து
ஒன்பதாம் திருமொழி
நும்மைத்தொழுதோம் நுந்தம் பணிசெய்திருக்கும் நும்மடியோம்*
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் ! இந்தளூரீரே ! *
எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆவா ! என்றிரங்கி *
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே ? 4.9.1 இந்தளூர்
சிந்தை தன்னுள் நீங்காதிருந்த திருவே ! மருவினிய
மைந்தா ! * அந்தணாலி மாலே ! சோலை மழகளிறே ! *
நந்தா விளக்கின் சுடரே ! நறையூர் நின்ற நம்பி ! * என்
எந்தாய் ! இந்தளூராய் ! அடியேற்கு இறையும் இரங்காயே. 4.9.2 திருவாலி,
திருநறையூர்,
இந்தளூர்,
திருமாலிருஞ்சோலை
பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த *
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் ! * உம்மைக் காணும்
ஆசையென்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் * அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே ! 4.9.3 இந்தளூர்
ஆசை வழுவாதேத்தும் எமக்கிங்கிழுக்காய்த்து * அடியோர்க்குத்
தேசமறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக் *
காசினொளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான் ! *
வாசி வல்லீர் ! இந்தளூரீர் ! வாழ்ந்தே போம் நீரே 4.9.4 இந்தளூர்
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இருநிலனு-
மாய் * எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால் *
தாயெம் பெருமான் தந்தை தந்தையாவீர் * அடியோமுக்
கே எம்பெருமானல்லீரோ? நீர் இந்தளூரீரே ! 4.9.5 இந்தளூர்
சொல்லாதொழிய கில்லேன் அறிந்த சொல்லில் * நும்மடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி யிருத்தீர் அடியேனை *
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ்வுலகத்து *
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே ! 4.9.6 இந்தளூர்
மாட்டீரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா
வீட்டீர் * இதனை வேறே சொன்னோம், இந்தளூரீரே ! *
காட்டீரானீர் நுந்தமடிக்கள் காட்டில் * உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே ? 4.9.7 இந்தளூர்
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற *
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் *
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி *
இன்ன வண்ணமென்று காட்டீர் இந்தளூரீரே ! 4.9.8 இந்தளூர்
எந்தை தந்தை தம்மா னென்றென்று எமரே ழேழளவும் *
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் *
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி *
இந்த வண்ணமென்று காட்டீர் இந்தளூரீரே ! 4.9.9 இந்தளூர்
ஏரார் பொழில்சூழ் இந்தளூரில், எந்தை பெருமானைக் *
காரார் புறவின் மங்கை வேந்தன், கலியனொலி செய்த *
சீரார் இன்சொல் மாலை, கற்றுத் திரிவார் * உலகத்து
ஆராரவரே, அமரர்க்கு என்றும் அமரராவாரே. 4.9.10 இந்தளூர்