பெரிய திருமொழி
ஒன்பதாம் பத்து
மூன்றாம் திருமொழி
தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன், தொழுதும் எழு *
பொன்னை நைவிக்கும், அப்பூஞ் செருந்தி மணநீழல் வாய் *
என்னை நைவித்து எழில் கொண்டு, அகன்ற பெருமானிடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து, அழகாய புல்லாணியே. 9.3.1 திருப்புல்லாணி
உருகி நெஞ்சே ! நினைந்திங் கிருந்தென்? தொழுதும் எழு *
முருகு வண்டுண் மலர்க் கைதையின் நீழலின் முன்னொரு நாள் *
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தானிடம் *
பொருது முந்நீர்க் கரைக்கே, மணியுந்து புல்லாணியே. 9.3.2 திருப்புல்லாணி
ஏது செய்தால் மறக்கேன் ? மனமே ! தொழுதும் எழு *
தாது மல்கு தடம் சூழ்பொழில், தாழ்வர் தொடர்ந்து * பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று, அகன்றானிடம் *
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே. 9.3.3 திருப்புல்லாணி
கொங்குண் வண்டே கரியாக வந்தான், கொடியேற்கு * முன்
நங்களீசன், நமக்கே பணித்த மொழி செய்திலன் *
மங்கை நல்லாய் தொழுதும் எழு, போய் அவன் மன்னுமூர் *
பொங்கு முந்நீர்க் கரைக்கே, மணியுந்து புல்லாணியே. 9.3.4 திருப்புல்லாணி
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன், தொழுதும் எழு *
துணரி ஞாழல் நறும்போது, நம் சூழ் குழல் பெய்து * பின்
தணரில் ஆவி தளருமென, அன்பு தந்தானிடம் *
புணரி யோதம் பணிலம், மணியுந்து புல்லாணியே. 9.3.5 திருப்புல்லாணி
எள்கி நெஞ்சே ! நினைந்திங்கிருந்தென் ? தொழுதும் எழு *
வள்ளல் மாயன் மணிவண்ணன், எம்மான் மருவுமிடம் *
கள்ளவிழும் மலர்க் காவியும், தூமடல் கைதையும் *
புள்ளும் அள்ளற் பழனங்களும், சூழ்ந்த புல்லாணியே. 9.3.6 திருப்புல்லாணி
பரவி நெஞ்சே ! தொழுதும் எழு, போய் அவன் பாலமாய் *
இரவும் நாளும், இனிக்கண் துயிலாதிருந்து என் பயன் ? *
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேற் கொண்டு * வெண் திரை
புரவியென்னப் புதம் செய்து, வந்துந்து புல்லாணியே. 9.3.7 திருப்புல்லாணி
அலமும் ஆழிப்படையும் உடையார், நமக்கு அன்பராய் *
சலமதாகித் தகவொன்றிலர், நாம் தொழுதும் எழு *
உலவுகால் நற்கழி யோங்கு, தண்பைம் பொழிலூடு * இசை
புலவு கானல், களிவண்டினம் பாடு புல்லாணியே. 9.3.8 திருப்புல்லாணி
ஓதி நாமங் குளித்து, உச்சி தன்னால் * ஒளிமாமலர்
பாதம் நாளும் பணிவோம், நமக்கே நலமாதலின் *
ஆது தாரா னெனிலும் தரும், அன்றியும் அன்பராய்
போதும் * மாதே தொழுதும், அவன் மன்னு புல்லாணியே. 9.3.9 திருப்புல்லாணி
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும், எழில் தாமரை *
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து, அழகாய புல்லாணி மேல் *
கலங்க லில்லாப் புகழான், கலியனொலி மாலை *
வலங்கொள் தொண்டர்க்கு இடமாவது, பாடில் வைகுந்தமே. 9.3.10 திருப்புல்லாணி