பெரிய திருமொழி
ஒன்பதாம் பத்து
ஐந்தாம் திருமொழி
தவள விளம்பிறை துள்ளு முந்நீர்த்
தண்மலர்த் தென்றலோடு அன்றிலொன்றித்
துவள * என் நெஞ்சகம் சோர ஈரும்
சூழ்பனி நாள் துயிலா திருப்பேன் *
இவளும் ஓர் பெண்கொடி யென்றிரங்கார்
என்னலம் ஐந்துமுன் கொண்டு போன *
குவளை மலர் நிற வண்ணர் மன்னு
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின், 9.5.1 திருக்குறுங்குடி
தாதவிழ் மல்லிகை புல்லி வந்த
தண்மதியினிள வாடை இன்னே *
ஊதை திரி தந்துழறி யுண்ண
ஓரிரவும் உறங்கேன் * உறங்கும்
பேதையர் பேதைமையால் இருந்து
பேசிலும் பேசுக பெய்வளையார் *
கோதை நறுமலர் மங்கை மார்வன்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.2 திருக்குறுங்குடி
காலையும் மாலை யொத்துண்டு
கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுலாவும் *
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும்
பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில் *
மாலவன் மாமணி வண்ணன்
மாயம் மற்றுமுள, அவை வந்திடாமுன் *
கோல மயில் பயிலும் புறவின்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.3 திருக்குறுங்குடி
கருமணி பூண்டு வெண்நாகு அணைந்து
கார் இமிலேற்று அணர், தாழ்ந்துலாவும்
ஒருமணி யோசை * என்னுள்ளம் தள்ள
ஓரிரவும் உறங்கா திருப்பேன் *
பெருமணி வானவ ருச்சி வைத்த
பேரருளாளன் பெருமை பேசிக் *
குருமணி நீர் கொழிக்கும் புறவின்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.4 திருக்குறுங்குடி
திண் திமிலேற்றின் மணியும்
ஆயன் தீங்குழலோசையும் * தென்றலோடு
கொண்டதோர் மாலையும், அந்தியீன்ற
கோல விளம்பிறையோடு கூடிப் *
பண்டைய வல்ல இவை நமக்குப்
பாவியே னாவியை வாட்டம் செய்யும் *
கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.5 திருக்குறுங்குடி
எல்லியும் நன்பகலும் இருந்தே
ஏசிலும் ஏசுக, ஏந்திழையார்
நல்லர் ? * அவர் திறம் நாமறியோம்
நாண் மடமச்சம் நமக்கிங்கில்லை *
வல்லன சொல்லி மகிழ்வரேலும்
மாமணி வண்ணரை நாம் மறவோம் *
கொல்லை வளரிள முல்லை புல்கு
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.6 திருக்குறுங்குடி
செங்கண் நெடிய கரிய மேனித்
தேவரொருவர் இங்கே புகுந்து * என்
அங்கம் மெலிய வளை கழல
ஆது கொலோ ? என்று சொன்ன பின்னை *
ஐங்கணை வில்லி தன்னாண்மை
என்னொடாடு மதனை அறிய மாட்டேன் *
கொங்கலர் தண்பணை சூழ் புறவில்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.7 திருக்குறுங்குடி
கேவலமன்று கடலினோசை
கேண்மின்கள் * ஆயன் கை ஆம்பல் வந்து என்
ஆவியளவும் அணைந்து நிற்கும்
அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு *
ஏவலம் காட்டி இவனொருவன்
இப்படியே புகுந்து எய்திடா முன் *
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.8 திருக்குறுங்குடி
சோத்தென நின்று தொழ இரங்கான்
தொன்னலங் கொண்டெனக்கு இன்று காறும் *
போர்ப்பதோர் பொற்படம் தந்து போனான்
போயின வூரறியேன் * என் கொங்கை
மூத்திடுகின்றன
மற்றவன் தன் மொய் அகல மணையாது வாளா *
கூத்தனிமையவர் கோன் விரும்பும்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.9 திருக்குறுங்குடி
செற்றவன் தென்னிலங்கை மலங்கத்
தேவ பிரான் * திருமாமகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட
பேரருளாளன், பெருமை பேசக்
கற்றவன் * காமருசீர்க் கலியன்
கண்ணகத்தும், மனத்தும் அகலாக்
கொற்றவன் * முற்றுலகாளி நின்ற
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 9.5.10 திருக்குறுங்குடி