பெரிய திருமொழி
ஒன்பதாம் பத்து
எட்டாம் திருமொழி
முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார்
கலவியை, விடு தடுமாறல் *
அந்தர மேழும் அலை கடலேழும்
ஆய, எம்மடிகள் தம் கோயில் *
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்
தழுவி வந்து அருவிகள் நிரந்து *
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை
வணங்குதும் வா மடநெஞ்சே ! 9.8.1 திருமாலிருஞ்சோலை
இண்டையும் புனலும் கொண்டிடையின்றி
எழுமினோ தொழுது மென்று * இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
சுடர்முடிக் கடவுள் தம்கோயில் *
விண்டலர் தூளி வேய் வளர் புறவில்
விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் *
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை
வணங்குதும் வா மடநெஞ்சே ! 9.8.2 திருமாலிருஞ்சோலை
பிணிவளர் ஆக்கை நீங்க நின்றேத்தப்
பெருநில மருளில் முன்னருளி *
அணிவளர் குறளாய் அகலிட முழுதும்
அளந்த எம் அடிகள் தம் கோயில் *
கணிவளர் வேங்கை நெடு நிலமதனில்
குறவர் தம் கவணிடைத் துரந்த *
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை
வணங்குதும் வா மடநெஞ்சே ! 9.8.3 திருமாலிருஞ்சோலை
சூர்மையிலாய பேய்முலை சுவைத்துச்
சுடு சரமடு சிலைத் துரந்து *
நீர்மையிலாத தாடகை மாள
நினைந்தவர் மனம் கொண்ட கோயில் *
கார்மலி வேங்கை கோங்கலர் புறவில்
கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் *
வார்புனல் சூழ்தண் மாலிருஞ்சோலை
வணங்குதும் வா மடநெஞ்சே ! 9.8.4 திருமாலிருஞ்சோலை
வணங்கலி லரக்கன் செருக் களத்தவிய
மணிமுடி ஒருபதும் புரள *
அணங் கெழுந்தவன் தன் கவந்தம் நின்றாட
அமர் செய்த அடிகள் தம் கோயில் *
பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப்
பிரசம் வந்திழிதரப் * பெருந்தேன்
மணங்கமழ் சாரல் மாலிருஞ்சோலை
வணங்குதும் வா மடநெஞ்சே ! 9.8.5 திருமாலிருஞ்சோலை
விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று
விளங்கனிக்கு இளங்கன்று விசிறிக் *
குடங் கலந்தாடிக் குரவை முன் கோத்த
கூத்த எம் அடிகள் தம் கோயில் *
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத்
தடவரைக் களிறென்று முனிந்து *
மடங்கல் நின்றதிரும் மாலிருஞ்சோலை
வணங்குதும் வா மடநெஞ்சே ! 9.8.6 திருமாலிருஞ்சோலை
தேனுகனாவி போயுக அங்கு ஓர்
செழுந்திரள் பனங்கனி யுதிரத் *
தானுகந் தெறிந்த தடங்கடல் வண்ணர்
எண்ணி முன் இடங் கொண்ட கோயில் *
வானகச் சோலை மரதகச் சாயல்
மாமணிக் கல்லதர் நிறைந்து
மானுகர் சாரல் மாலிருஞ்சோலை
வணங்குதும் வா மடநெஞ்சே ! 9.8.7 திருமாலிருஞ்சோலை
புதமிகு விசும்பில் புணரி சென்றணவப்
பொருகடல் அரவணைத் துயின்று *
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த
பனிமுகில் வண்ணர் தம்கோயில் *
கதமிகு சினத்த கடதடக் களிற்றின்
கவுள்வழிக் களிவண்டு பருக *
மதமிகு சாரல் மாலிருஞ்சோலை
வணங்குதும் வா மடநெஞ்சே ! 9.8.8 திருமாலிருஞ்சோலை
புந்தியில் சமணர் புத்தரென்றிவர்கள்
ஒத்தன பேசவும் உகந்திட்டு *
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்
எண்ணி முன் இடங்கொண்ட கோயில் *
சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்
தாழ்வரை மகளிர்கள் * நாளும்
மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ்சோலை
வணங்குதும் வா மடநெஞ்சே ! 9.8.9 திருமாலிருஞ்சோலை
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை
மாமணி வண்ணரை வணங்கும் *
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல்
சூழ்வயலாலி நன்னாடன் *
கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்
கலியன் வாயொலி செய்த பனுவல்
கொண்டு * இவை பாடும் தவமுடையார்கள்
ஆள்வர் இக்குரை கடலுலகே. 9.8.10 திருமாலிருஞ்சோலை