பெரிய திருமொழி
பதினோராம் பத்து
இரண்டாம் திருமொழி
குன்றமெடுத்து மழை தடுத்து, இளையாரொடும் *
மன்றில் குரவை பிணைந்த மால், என்னை மால் செய்தான் *
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல், கிடந்தீர்கின்ற *
அன்றிலின் கூட்டைப், பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ ? ! 11.2.1
பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து, அரிமாச் செகுத்து *
ஆங்கு வேழத்தின், கொம்பு கொண்டு * வன்பேய்முலை
வாங்கியுண்ட, அவ்வாயன் நிற்க * இவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல், என்னோடாடும் இளமையே. 11.2.2
மல்லொடு கஞ்சனும் துஞ்ச, வென்ற மணிவண்ணன் *
அல்லிமலர்த் தண்துழாய், நினைந்திருந்தேனையே *
எல்லியில் மாருதம், வந்து அடும், அதுவன்றியும் *
கொல்லை வல்லேற்றின் மணியும், கோயின்மை செய்யுமே. 11.2.3
பொருந்து மாமரம், ஏழும் எய்த புனிதனார் *
திரு உந்து சேவடி, என் மனத்து நினைதொறும் *
கருந்தண் மாகடல், கங்குலார்க்கும், அதுவன்றியும் *
வருந்த வாடை வரும், இதற்கு இனி என்செய்கேன் ? 11.2.4
அன்னை முனிவதும், அன்றிலின் குரல் ஈர்வதும் *
மன்னு மறிகட லார்ப்பதும், வளை சோர்வதும் *
பொன்னங் கலையல்குல், அன்ன மென்னடைப் * பூங்குழல்
பின்னை மணாளர், திறத்தமாயின பின்னையே. 11.2.5
ஆழியும் சங்கு முடைய, நங்களடிகள் தாம் *
பாழிமையான கனவில், நம்மைப் பகர்வித்தார் *
தோழியும் நானும் ஒழிய, வையம் துயின்றது *
கோழியும் கூகின்றதில்லை, கூரிருளாயிற்றே ! 11.2.6
காமன் தனக்கு முறையல்லேன், கடல் வண்ணனார் *
மாமணவாளர், எனக்குத் தானும் மகன் சொல்லில் *
யாமங்கள் தோறு எரி வீசும், என்னிளங் கொங்கைகள் *
மாமணி வண்ணர் திறத்தவாய், வளர்கின்றவே. 11.2.7
மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற, மணாளனார் *
நெஞ்சம் நிறை கொண்டு போயினார், நினைக்கின்றிலர் *
வெஞ்சுடர் போய் விடியாமல், எவ்விடம் புக்கதோ ! *
நஞ்சு உடலம் துயின்றால், நமக்கு இனி நல்லதே. 11.2.8 திருமாலிருஞ்சோலை
காமன் கணைக்கு ஓரிலக்கமாய், நலத்தின் மிகு *
பூமரு கோல, நம் பெண்மை சிந்தித்திராது போய் *
தூமலர் நீர் கொடு, தோழி ! நாம் தொழுதேத்தினால் *
கார்முகில் வண்ணரைக், கண்களால் காணலாங் கொலோ ? 11.2.9
வென்றி விடையுடன், ஏழடர்த்த அடிகளை *
மன்றில் மலிபுகழ், மங்கை மன் கலிகன்றி சொல்*
ஒன்று நின்ற ஒன்பதும், உரைப்பவர் தங்கள் மேல் *
என்றும் நில்லா வினை, ஒன்றும் சொல்லில் உலகிலே. 11.2.10