பெரிய திருமொழி
பதினோராம் பத்து
நான்காம் திருமொழி
நிலையிட மெங்கு மின்றி நெடு வெள்ளம், உம்பர்
வள நாடு மூட * இமையோர்
தலையிட மற்று எமக்கு ஓர் சரணில்லை யென்ன
அரணாவனென்னும் அருளால் *
அலை கடல் நீர் குழம்ப அகடாட வோடி
அகல் வானுரிஞ்ச * முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை
மறவாது இறைஞ்சு என் மனனே ! 11.4.1
செருமிகு வாளெயிற்ற அரவொன்று சுற்றித்
திசை மண்ணும் விண்ணும் * உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப
இமையோர்கள் நின்று கடையப் *
பருவரை யொன்று நின்று முதுகில் பரந்து
சுழலக் கிடந்து துயிலும் *
அருவரை யன்ன தன்மை அடலாமையான
திருமால், நமக்கு ஓரரணே. 11.4.2
தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பரும்பர்
உலகேழினொடும் உடனே *
மாதிர மண் சுமந்த வட குன்றும் நின்ற
மலை யாறும் ஏழு கடலும் *
பாதமர் சூழ் குளம்பின் அகமண்டலத்தின்
ஒரு பாலொடுங்க வளர் சேர் *
ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தி
யது, நம்மை யாளுமரசே. 11.4.3
தளையவிழ் கோதை மாலை இருபால் தயங்க
எரிகான்று இரண்டு தறுகண் *
அளவெழ வெம்மை மிக்க அரியாகி
அன்று, பரியோன் சினங்களவிழ *
வளையுகிராளி மொய்ம்பின் மறவோனதாகம்
மதியாது சென்று ஒருகிரால் *
பிளவெழ விட்ட குட்டமது, வையமூடு
பெருநீரில் மும்மை பெரிதே. 11.4.4
வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி
அங்கு ஓர் குறளாகி மெய்ம்மை யுணரச் *
செந்தொழில் வேத நாவின் முனியாகி
வையம் அடி மூன்றிரந்து பெறினும் *
மந்தர மீது போகி மதி நின்றிறைஞ்ச
மலரோன் வணங்க * வளர் சேர்
அந்தர மேழினுாடு செல வுய்த்த பாத
மது, நம்மை யாளுமரசே. 11.4.5
இருநில மன்னர் தம்மை, இருநாலு மெட்டும்
ஒருநாலு மொன்றும் உடனே *
செருநுதலூடு போகி அவராவி மங்க
மழுவாளில் வென்ற திறலோன் *
பெருநில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர்
புலமங்கை கேள்வர் * புகழ் சேர்
பெருநில முண்டுமிழ்ந்த பெருவாயராகி
யவர், நம்மை ஆள்வர் பெரிதே. 11.4.6
இலைமலி பள்ளி யெய்தி இது மாயமென்ன
இனமாய மான் பின், எழில்சேர் *
அலைமலி வேற்கணாளை அகல்விப்பதற்கு
ஒரு உருவாய மானை யமையா *
கொலைமலி யெய்துவித்த கொடியோ னிலங்கை
பொடியாக, வென்றி யமருள் *
சிலைமலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள்
திருமால், நமக்கு ஓரரணே. 11.4.7
முன்னுலகங்களேழும் இருள் மண்டியுண்ண
முதலோடு வீடுமறியாது *
என்னிது ? வந்ததென்ன இமையோர் திசைப்ப
எழில் வேதமின்றி மறையப் *
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ *
அன்னமதா யிருந்து அங்கற நூலுரைத்த
அது நம்மை யாளுமரசே. 11.4.8
துணை நிலை மற்றெமக்கோருள தென்றிராது
தொழுமின்கள் தொண்டர் தொலைய *
உணமுலை முன் கொடுத்த உரவோளதாவி
உகவுண்டு வெண்ணெய் மருவி *
பணைமுலை யாயர் மாதர் உரலோடு கட்ட
அதனோடுமோடி * அடல் சேர்
இணை மருதிற்று வீழ நடை கற்ற தெற்றல்
வினை பற்றறுக்கும் விதியே. 11.4.9
கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று
கொடியோ னிலங்கை பொடியா *
சிலை கெழு செஞ்சரங்கள் செலவுய்த்த நங்கள்
திருமாலை, வேலை புடை சூழ் *
கலிகெழு மாடவீதி வயல் மங்கை மன்னு
கலிகன்றி, சொன்ன பனுவல் *
ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற தொண்டரவர்
ஆள்வர் உம்பருலகே. 11.4.10