பெரிய திருமொழி
பதினோராம் பத்து
ஐந்தாம் திருமொழி
மானமரு மென்னோக்கி, வைதேவி இன் துணையாக் *
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான், காணேடீ ! *
கானமரும் கல்லதர் போய்க், காடுறைந்த பொன்னடிக்கள் *
வானவர் தம் சென்னி மலர் கண்டாய், சாழலே ! 11.5.1
தந்தை தளை கழலத் தோன்றிப், போய் * ஆய்ப்பாடி
நந்தன் குலமதலையாய் வளர்ந்தான், காணேடீ ! *
நந்தன் குலமதலையாய் வளர்ந்தான், நான்முகற்குத்
தந்தை காண் * எந்தை பெருமான் காண், சாழலே ! 11.5.2
ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப், போய் * ஆய்ப்பாடித்
தாழ்குழலார் வைத்த தயிருண்டான், காணேடீ ! *
தாழ்குழலார் வைத்த தயிருண்ட, பொன்வயிறு * இவ்
வேழுலகு முண்டும் இடமுடைத்தால், சாழலே ! 11.5.3
அறியாதார்க்கு ஆனாயனாகிப், போய் * ஆய்ப்பாடி
உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்தான், காணேடீ ! *
உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்த, பொன் வயிற்றுக்கு *
எறி நீருலகனைத்தும் எய்தாதால், சாழலே ! 11.5.4
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால், மொத்துண்டு *
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான், காணேடீ ! *
கண்ணிக் குறுங்கயிற்றால், கட்டுண்டானாகிலும் *
எண்ணற் கரியன் இமையோர்க்கும், சாழலே ! 11.5.5
கன்றப் பறை கறங்கக், கண்டவர் தம் கண் களிப்ப *
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான், காணேடீ ! *
மன்றில் மரக்கால் கூத்து, ஆடினா னாகிலும் *
என்றும் அரியன் இமையோர்க்கும், சாழலே ! 11.5.6
கோதை வேல் ஐவர்க்காய், மண்ணகலம் கூறிடுவான் *
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான், காணேடீ ! *
தூதனாய் மன்னவனால், சொல்லுண்டா னாகிலும் *
ஓதநீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான், சாழலே ! 11.5.7
பார் மன்னர் மங்கப் படை தொட்டு, வெஞ்சமத்துத் *
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான், காணேடீ ! *
தேர் மன்னர்க்காய் அன்று, தேரூர்ந்தா னாகிலும் *
தார் மன்னர் தங்கள் தலைமேலான், சாழலே ! 11.5.8
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய் *
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான், காணேடீ ! *
வண்தாரான் வேள்வியில், மண்ணிரந் தானாகிலும் *
விண்டேழுலகுக்கும் மிக்கான் காண், சாழலே ! 11.5.9
கள்ளத்தால் மாவலியை, மூவடி மண் கொண்டளந்தான் *
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால், காணேடீ ! *
வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் * கலிகன்றி
உள்ளத்தினுள்ளே உளன் கண்டாய், சாழலே ! 11.5.10 திருவேங்கடம் திருப்பதி,
திருப்பாற்கடல்