பெரிய திருமொழி
பத்தாம் பத்து
நான்காம் திருமொழி
சந்த மலர்க் குழல் தாழத், தானுகந்தோடித் தனியே
வந்து * என் முலைத்தடந் தன்னை வாங்கி, நின் வாயில் மடுத்து *
நந்தன் பெறப் பெற்ற நம்பீ ! நானுகந்துண்ணு மமுதே *
எந்தை பெருமானே ! உண்ணாய், என்னம்மம் சேமமுண்ணாயே. 10.4.1
வங்கமறி கடல் வண்ணா ! மாமுகிலே யொக்கும் நம்பீ ! *
செங்கண் நெடிய திருவே! செங்கமலம் புரை வாயா ! *
கொங்கை சுரந்திட உன்னைக் கூவியும், காணாதிருந்தேன் *
எங்கிருந்து ஆயர்களோடும், என் விளையாடுகின்றாயே ? 10.4.2
திருவிற் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைகளோடு *
தெருவில் திளைக்கின்ற நம்பீ ! செய்கின்ற தீமைகள் கண்டிட்டு *
உருகி என் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற *
மருவிக் குடங்காலிருந்து வாய் முலையுண்ண நீ வாராய். 10.4.3
மக்கள் பெறுதவம் போலும், வையத்து வாழும் மடவார் *
மக்கள் பிறர் கண்ணுக் கொக்கும் முதல்வா ! மதக்களிறன்னாய் *
செக்கரிளம்பிறை தன்னை வாங்கி, நின் கையில் தருவன் *
ஒக்கலை மேலிருந்து, அம்மமுகந்து இனிதுண்ண நீ வாராய். 10.4.4
மைத்த கருங்குஞ்சி மைந்தா ! மாமருதூடு நடந்தாய் ! *
வித்தகனே ! விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா ! *
இத்தனை போதன்றி என்தன் கொங்கை சுரந்திருக்க கில்லா *
உத்தமனே ! அம்மமுண்ணா யுலகளந்தாய் ! அம்மமுண்ணாய். 10.4.5
பிள்ளைகள் செய்வன செய்யாய், பேசின் பெரிதும் வலியை *
கள்ளம் மனத்தி லுடையை, காணவே தீமைகள் செய்தி *
உள்ள முருகி என் கொங்கை, ஓட்டந்து பாய்ந்திடுகின்ற *
பள்ளிக் குறிப்புச் செய்யாதே, பாலமுதுண்ண நீ வாராய். 10.4.6
தன்மகனாக வன்பேய்ச்சி, தான் முலையுண்ணக் கொடுக்க *
வன் மகனாய் அவளாவி வாங்கி, முலையுண்ட நம்பீ ! *
நன் மகளாய் மகளோடு, நானில மங்கை மணாளா ! *
என் மகனே ! அம்ம முண்ணாய், என்னம்மம் சேம முண்ணாயே. 10.4.7
உந்தமடிகள் முனிவர், உன்னை நான் என் கையில் கோலால் *
நொந்திட மோதவும் கில்லேன், நுங்கள் தமாநிரை எல்லாம் *
வந்து புகுதரும் போது, வானிடைத் தெய்வங்கள் காண *
அந்தியம் போதங்கு நில்லேல், ஆழியங்கையனே ! வாராய். 10.4.8
பெற்றத் தலைவன் எங்கோமான் பேரருளாளன் மதலாய் ! *
சுற்றக் குழாத்திளங் கோவே ! தோன்றிய தொல் புகழாளா !*
கற்றினந் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே ! *
எற்றுக்கென் அம்ம முண்ணாதே, எம்பெருமான் ! இருந்தாயே ? 10.4.9
இம்மை இடர் கெட வேண்டி ஏந்தெழில் தோள் கலிகன்றி *
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கணெடியவன் தன்னை *
அம்ம முண்ணென் றுரைக்கின்ற பாடலிவை ஐந்து மைந்தும் *
மெய்ம்மை மனத்து வைத்தேத்த விண்ணவ ராகலுமாமே. 10.4.10