பெரிய திருமொழி
பத்தாம் பத்து
பத்தாம் திருமொழி
திருத்தாய் செம்போத்தே ! * திருமாமகள் தன் கணவன் *
மருத்தார், தொல்புகழ் மாதவனை வரத் * திருத்தாய் செம்போத்தே ! 10.10.1
கரையாய் காக்கைப் பிள்ளாய் !* கருமாமுகில்போல் நிறத்தன் *
உரையார் தொல்புகழுத்தமனைவரக்* கரையாய் காக்கைப்பிள்ளாய் ! 10.10.2
கூவாய் பூங்குயிலே ! * குளிர்மாரி தடுத்துகந்த *
மாவாய் கீண்ட மணிவண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே ! 10.10.3
கொட்டாய், பல்லிக்குட்டி ! * குடமாடி, உலகளந்த *
மட்டார், பூங்குழல் மாதவனை வரக் * கொட்டாய் பல்லிக்குட்டி ! 10.10.4
சொல்லாய் பைங்கிளியே ! சுடராழி வலனுயர்த்த *
மல்லார்தோள், வடவேங்கடவனை வரச் * சொல்லாய் பைங்கிளியே! 10.10.5 திருவேங்கடம் திருப்பதி
கோழீ கூவென்னுமால் * தோழீ ! நான் என் செய்கேன் ?
ஆழிவண்ணர், வரும் பொழுதாயிற்றுக் கோழீ கூவென்னுமால். 10.10.6
காமற்கு என் கடவேன் ? * கருமாமுகில் வண்ணற்கல்லால் *
பூமேலைங்கணை கோத்துப் புகுந்தெய்யக் * காமற்கு என்கடவேன்? 10.10.7
இங்கே போதுங் கொலோ ? * இனவேல் நெடுங்கண் களிப்பக் *
கொங்கார்சோலைக்குடந்தைக் கிடந்தமால்* இங்கேபோதுங்கொலோ? 10.10.8 திருக்குடந்தை (கும்பகோணம்)
இன்னா ரென்றறியேன் * அன்னே ! ஆழியொடும் *
பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை * இன்னா ரென்றறியேன். 10.10.9
தொண்டீர்! பாடுமினோ * சுரும்பார்பொழில் மங்கையர்கோன்*
ஒண்தார்வேல் கலியனொலி மாலைகள் * தொண்டீர் ! பாடுமினோ. 10.10.10
*********