பெரிய திருமொழி
பத்தாம் பத்து
எட்டாம் திருமொழி
காதில் கடிப்பிட்டுக், கலிங்க முடுத்துத் *
தாது நல்ல தண்ணந் துழாய், கொடணிந்து *
போது மறுத்துப், புறமே வந்து நின்றீர் *
ஏதுக்கு இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ? 10.8.1
துவராடை யுடுத்து, ஒரு செண்டு சிலுப்பிக் *
கவராக முடித்துக், கலிக்கச்சுக் கட்டிக் *
சுவரார் கதவின் புறமே வந்து, நின்றீர் *
இவரார் ? இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ? 10.8.2
கருளக் கொடி யொன்றுடையீர் ! தனிப்பாகீர் ! *
உருளச் சகடமது உறக்கில், நிமிர்த்தீர் ! *
உருளைக் கொடு பாடி வந்து, இல்லம் புகுந்தீர் *
இருளத்து இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ? 10.8.3
நாமம் பலவுமுடை, நாரண நம்பீ ! *
தாமத் துளபம், மிக நாறிடுகின்றீர் *
காமனெனப் பாடி வந்து, இல்லம் புகுந்தீர் *
ஏமத்து இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ? 10.8.4
சுற்றும் குழல் தாழச், சுரிகை யணைத்து *
மற்றும் பல, மாமணி பொன் கொடணிந்து *
முற்றம் புகுந்து, முறுவல் செய்து நின்றீர் *
எற்றுக்கு இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ? 10.8.5
ஆனாயரும் ஆநிரையும், அங்கொழியக் *
கூனாயதோர், கொற்ற வில்லொன்று கையேந்திப் *
போனார் இருந்தாரையும், பார்த்துப் புகுந்தீர் *
ஏனோர்கள் முன்னென் ?, இதுவென் ? இதுவென்னோ ? 10.8.6
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர் ! *
அல்லே யறிந்தோம், நும் மனத்தின் கருத்தைச் *
சொல்லா தொழியீர், சொன்ன போதினால் வாரீர் *
எல்லே இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ? 10.8.7
புக்காடரவம், பிடித்தாட்டும் புனிதீர் ? *
இக்காலங்கள், யாம் உமக்கு ஏதொன்று மல்லோம் *
தக்கார் பலர், தேவிமார் சால வுடையீர் *
எக்கே ! இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ? 10.8.8
ஆடி யசைந்து, ஆய் மடவாரொடு நீ போய்க்,
கூடிக் குரவை பிணை, கோமளப் பிள்ளாய் ! *
தேடித் திருமாமகள், மண்மகள் நிற்ப
ஏடி ! இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ? 10.8.9
அல்லிக் கமலக் கண்ணனை, அங்கு ஓராய்ச்சி *
எல்லிப் பொழுதூடிய, ஊடல் திறத்தைக் *
கல்லின் மலிதோள், கலியன் சொன்ன மாலை *
சொல்லித் துதிப்பாரவர், துக்கமிலரே. 10.8.10