திருவாய்மொழி
ஆறாம் பத்து
முதல் திருவாய்மொழி
வைகல் பூங்கழிவாய், வந்து மேயும் குருகினங்காள் ! *
செய் கொள் செந்நெலுயர், திருவண்வண்டூருறையும் *
கைகொள் சக்கரத்து, என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
கைகள் கூப்பிச் சொல்லீர், வினையாட்டியேன் காதன்மையே. 6.1.1 திருவண்வண்டூர்
காதல் மென் பெடையோடு, உடன் மேயும் கருநாராய் ! *
வேத வேள்வி யொலி முழங்கும், தண் திருவண்வண்டூர் *
நாதன் ஞால மெல்லா முண்ட, நம்பெருமானைக் கண்டு *
பாதம் கை தொழுது பணியீர், அடியேன் திறமே. 6.1.2 திருவண்வண்டூர்
திறங்களாகி எங்கும், செய்களூடுழல் புள்ளினங்காள் ! *
சிறந்த செல்வம் மல்கு, திருவண்வண்டூருறையும் *
கறங்கு சக்கரக்கைக், கனி வாய்ப் பெருமானைக் கண்டு *
இறங்கி நீர் தொழுது பணியீர், அடியேனிடரே. 6.1.3 திருவண்வண்டூர்
இடரில் போகம் மூழ்கி, இணைந்தாடும் மட வன்னங்காள் ! *
விடலில் வேத வொலி முழங்கும், தண் திருவண்வண்டூர் *
கடலின் மேனிப் பிரான் கண்ணனை, நெடுமாலைக் கண்டு *
உடலம் நைந்து ஒருத்தி, உருகுமென்று உணர்த்துமினே. 6.1.4 திருவண்வண்டூர்
உணர்த்த லூடலுணர்ந்து, உடன் மேயும் மடவன்னங்காள் ! *
திணர்த்த வண்டல்கள் மேல், சங்கு சேரும் திருவண்வண்டூர் *
புணர்த்த பூந்தண் துழாய் முடி, நம்பெருமானைக் கண்டு *
புணர்த்த கையினராய், அடியேனுக்கும் போற்றுமினே. 6.1.5 திருவண்வண்டூர்
போற்றி யான் இரந்தேன், புன்னை மேலுறை பூங்குயில்காள் ! *
சேற்றில் வாளை துள்ளும், திருவண்வண்டூருறையும் *
ஆற்ற லாழியங்கை, அமரர் பெருமானைக் கண்டு *
மாற்றம் கொண்டருளீர், மையல் தீர்வதொரு வண்ணமே. 6.1.6 திருவண்வண்டூர்
ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை ஒண் கிளியே ! *
செருவொண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர் *
கருவண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் *
செருவொண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே. 6.1.7 திருவண்வண்டூர்
திருந்தக் கண்டு எனக்கு, ஒன்றுரையாய் ஒண்சிறு பூவாய் ! *
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ், தண்திருவண்வண்டூர் *
பெருந்தண் தாமரைக் கண், பெருநீள்முடி நால் தடந்தோள் *
கருந்திண் மாமுகில் போல், திருமேனி யடிகளையே. 6.1.8 திருவண்வண்டூர்
அடிகள் கை தொழுது, அலர் மேலசையும் அன்னங்காள் ! *
விடிவை சங்கொலிக்கும், திருவண்வண்டூருறையும் *
கடிய மாயன் தன்னைக், கண்ணனை நெடுமாலைக் கண்டு *
கொடிய வல்வினையேன், திறம் கூறுமின் வேறு கொண்டே. 6.1.9 திருவண்வண்டூர்
வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன், வெறிவண்டினங்காள்! *
தேறு நீர்ப் பம்பை வடபாலைத், திருவண்வண்டூர் ! *
மாறில் போரரக்கன், மதிள் நீறெழச் செற்றுகந்த *
ஏறு சேவகனார்க்கு, என்னையும் உளள் என்மின்களே. 6.1.10 திருவண்வண்டூர்
மின்கொள் சேர் புரிநூல் குறளாய், அகல் ஞாலம் கொண்ட *
வன் கள்வனடி மேல், குருகூர்ச் சடகோபன் சொன்ன *
பண் கொளாயிரத்துள், இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு *
இன்கொள் பாடல் வல்லார், மதனர் மின்னிடையவர்க்கே. 6.1.11 திருவண்வண்டூர்