திருவாய்மொழி
ஆறாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி
உலகமுண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி யம்மானே ! *
நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி !, நெடியாய் ! அடியேனாருயிரே ! *
திலதமுலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே ! *
குலதொல்லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே. 6.10.1 திருவேங்கடம் திருப்பதி
கூறாய் நீறாய் நிலனாகிக், கொடு வல்லசுரர் குலமெல்லாம் *
சீறா எறியும் திருநேமி வலவா ! தெய்வக் கோமானே ! *
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே ! *
ஆறா வன்பிலடியேன், உன்னடி சேர் வண்ணம் அருளாயே. 6.10.2 திருவேங்கடம் திருப்பதி
வண்ணமருள் கொளணி மேக வண்ணா ! மாய வம்மானே ! *
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே ! இமையோ ரதிபதியே ! *
தெண்ணலருவி மணிபொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே ! *
அண்ணலே ! உன்னடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே. 6.10.3 திருவேங்கடம் திருப்பதி
ஆவா ! என்னாது உலகத்தை யலைக்கும் அசுரர் வாணாள் மேல் *
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா ! திருமாமகள் கேள்வா !
தேவா !* சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே ! *
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே. 6.10.4 திருவேங்கடம் திருப்பதி
புணரா நின்ற மரமேழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ ! *
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ ! *
திணரார் மேகமெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே ! *
திணரார் சார்ங்கத்து உன பாதம் சேர்வது, அடியே னெந்நாளே? 6.10.5 திருவேங்கடம் திருப்பதி
எந்நாளே ? நாம்மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று *
எந்நாளும் நின்று இமையோர்களேத்தி இறைஞ்சி இனமினமாய் *
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே ! *
மெய்ந்நானெய்தி எந்நாள் உன்னடிக்கண் அடியேன் மேவுவதே? 6.10.6 திருவேங்கடம் திருப்பதி
அடியேன் மேவி யமர்கின்ற அமுதே ! இமையோ ரதிபதியே ! *
கொடியாவடு புள்ளுடையானே ! கோலக் கனிவாய்ப் பெருமானே ! *
செடியார் வினைகள் தீர்மருந்தே ! திருவேங்கடத்தெம்பெருமானே ! *
நொடியார் பொழுதும் உனபாதம் காண, நோலா தாற்றேனே. 6.10.7 திருவேங்கடம் திருப்பதி
நோலாதாற்றேன் உனபாதம் காணவென்று நுண்ணுணர்வின் *
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் *
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே ! *
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே. 6.10.8 திருவேங்கடம் திருப்பதி
வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே ! *
செந்தாமரைக் கண் செங்கனிவாய் நால் தோளமுதே ! எனதுயிரே ! *
சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே ! *
அந்தோ ! அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே. 6.10.9 திருவேங்கடம் திருப்பதி
அகலகில்லேனிறையு மென்றலர்மேல் மங்கையுறை மார்பா ! *
நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை யாள்வானே ! *
நிகரிலமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே ! *
புகலொன்றில்லா அடியேன், உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. 6.10.10 திருவேங்கடம் திருப்பதி
அடிக்கீழமர்ந்து புகுந்து
அடியீர் ! வாழ்மினென்றென்றருள் கொடுக்கும் *
படிக்கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன் *
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கிவை பத்தும் *
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே. 6.10.11 திருவேங்கடம் திருப்பதி
*********