திருவாய்மொழி
ஆறாம் பத்து
மூன்றாம் திருவாய்மொழி
நல்குரவும் செல்வும், நரகும் சுவர்க்கமுமாய் *
வெல் பகையும் நட்பும், விடமும் அமுதமுமாய்ப் *
பல்வகையும் பரந்த பெருமான், என்னை யாள்வானைச் *
செல்வம் மல்கு குடித், திருவிண்ணகர்க் கண்டேனே. 6.3.1 திருவிண்ணகர்
கண்ட இன்பம் துன்பம், கலக்கங்களும் தேற்றமுமாய்த் *
தண்டமும் தண்மையும், தழலும் நிழலுமாய்க் *
கண்டு கொள்தற் கரிய பெருமான், என்னை யாள்வானூர் *
தெண் திரைப் புனல் சூழ், திருவிண்ணகர் நன்னகரே. 6.3.2 திருவிண்ணகர்
நகரமும் நாடுகளும், ஞானமும் மூடமுமாய் *
நிகரில் சூழ் சுடராய் இருளாய், நிலனாய் விசும்பாய்ச் *
சிகர மாடங்கள் சூழ், திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
புகர் கொள் கீர்த்தி யல்லால், இல்லை யாவர்க்கும் புண்ணியமே. 6.3.3 திருவிண்ணகர்
புண்ணியம் பாவம், புணர்ச்சி பிரிவென்றிவையாய் *
எண்ணமாய் மறப்பாய், உண்மையாய் இன்மையாய் அல்லனாய்த் *
திண்ண மாடங்கள் சூழ், திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணனின்னருளே, கண்டு கொண்மின்கள் கைதவமே. 6.3.4 திருவிண்ணகர்
கைதவம் செம்மை, கருமை வெளுமையுமாய் *
மெய் பொய் இளமை முதுமை, புதுமை பழமையுமாய்ச் *
செய்த திண் மதிள் சூழ், திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
பெய்த காவு கண்டீர், பெருந் தேவுடை மூவுலகே. 6.3.5 திருவிண்ணகர்
மூவுலகங்களுமாய் அல்லனாய், உகப்பாய் முனிவாய்ப் *
பூவில் வாழ் மகளாய்த், தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய் *
தேவர் மேவித் தொழும், திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
பாவியேன் மனத்தே உறைகின்ற, பரஞ்சுடரே. 6.3.6 திருவிண்ணகர்
பரஞ்சுடருடம்பாய், அழுக்குப் பதித்த வுடம்பாய்க் *
கரந்தும் தோன்றியும் நின்றும், கைதவங்கள் செய்தும் * விண்ணோர்
சிரங்களால் வணங்கும், திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
வரங் கொள் பாதமல்லால், இல்லை யாவர்க்கும் வன் சரணே. 6.3.7 திருவிண்ணகர்
வன்சரண் சுரர்க்காய், அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த் *
தன் சரண் நிழற் கீழ், உலகம் வைத்தும் வையாதும் *
தென் சரண் திசைக்குத், திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
என் சரண் என் கண்ணன், என்னையாளுடை என்னப்பனே. 6.3.8 திருவிண்ணகர்
என்னப்பன் எனக்காயிகுளாய், என்னைப் பெற்றவளாய்ப் *
பொன்னப்பன் மணியப்பன், முத்தப்பன் என்னப்பனுமாய் *
மின்னப் பொன்மதிள் சூழ், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் *
தன்னொப்பா ரில்லப்பன், தந்தனன் தனதாள் நிழலே. 6.3.9 திருவிண்ணகர்
நிழல் வெய்யில் சிறுமை பெருமை, குறுமை நெடுமையுமாய்ச் *
சுழல்வன நிற்பன, மற்றுமாய் அவை யல்லனுமாய் *
மழலை வாய் வண்டு வாழ், திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்களன்றி * மற்றோர் களைகணிலம் காண்மின்களே. 6.3.10 திருவிண்ணகர்
காண்மின்கள் உலகீர் ! என்று, கண்முகப்பே நிமிர்ந்த *
தாளிணையன் தன்னைக், குருகூர்ச் சடகோபன் சொன்ன *
ஆணையாயிரத்துத், திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் *
கோணையின்றி விண்ணோர்க்கு, என்றுமாவர் குரவர்களே. 6.3.11 திருவிண்ணகர்