திருவாய்மொழி
ஆறாம் பத்து
எட்டாம் திருவாய்மொழி
பொன்னுலகாளீரோ ? புவனி முழுதாளீரோ ? *
நன்னலப் புள்ளினங்காள் ! வினையாட்டியேன் நான் இரந்தேன் *
முன்னுலகங்க ளெல்லாம் படைத்த, முகில் வண்ணன் கண்ணன் *
என்னலம் கொண்ட பிரான் தனக்கு, என் நிலைமை யுரைத்தே. 6.8.1
மையமர் வாள்நெடுங்கண், மங்கைமார் முன்பு என்கையிருந்து *
நெய்யமர் இன்னடிசில், நிச்சல் பாலொடு மேவீரோ? *
கையமர் சக்கரத்து, என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
மெய்யமர் காதல் சொல்லிக், கிளிகாள் ! விரைந்தோடி வந்தே. 6.8.2
ஓடி வந்து என் குழல் மேல், ஒளி மாமலர் ஊதீரோ? *
கூடிய வண்டினங்காள் ! குரு நாடுடை ஐவர்கட்காய் *
ஆடிய மாநெடுந் தேர்ப் படை, நீறெழச் செற்ற பிரான் *
சூடிய தண் துளவமுண்ட, தூமது வாய்கள் கொண்டே. 6.8.3
தூமது வாய்கள் கொண்டு வந்து என் முல்லைகள் மேல் தும்பிகாள் !*
பூமதுவுண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற *
மாமதுவார் தண்துழாய் முடி வானவர் கோனைக் கண்டு *
யாம் இதுவோ தக்கவாறு ? என்ன வேண்டுங் கண்டீர் நுங்கட்கே. 6.8.4
நுங்கட்கு யானுரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள் ! *
வெங்கண் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சங் கவர்ந்த *
செங்கண் கருமுகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை *
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு ? என்மினே. 6.8.5
என்மின்னு நூல்மார்வன் என்கரும் பெருமான் என் கண்ணன் *
தன்மன்னு நீள்கழல் மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான் *
கன்மின்களென்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லி *
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே ! 6.8.6
பூவைகள் போல் நிறத்தன், புண்டரீகங்கள் போலும் கண்ணன் *
யாவையும் யாவருமாய், நின்ற மாயன் என்னாழிப் பிரான் *
மாவை வல்வாய் பிளந்த, மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி *
பாவைகள் ! தீர்க்கிற்றிரே, வினையாட்டியேன் பாசறவே. 6.8.7
பாசற வெய்தி இன்னே, வினையேன் எனையூழி நைவேன் ? *
ஆசறு தூவி வெள்ளைக் குருகே அருள் செய்து ஒரு நாள் *
மாசறு நீலச் சுடர் முடி, வானவர் கோனைக் கண்டு *
ஏசறும் நும்மை யல்லால், மறுநோக்கிலள் பேர்த்து மற்றே. 6.8.8
பேர்த்து மற்றோர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன் *
நீர்த்திரை மேலுலவி, இரை தேரும் புதாவினங்காள் ! *
கார்த்திரள் மாமுகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு *
வார்த்தைகள் கொண்டருளி உரையீர், வைகல் வந்திருந்தே. 6.8.9
வந்திருந்து உம்முடைய, மணிச்சேவலும் நீருமெல்லாம் *
அந்தர மொன்றுமின்றி, அலர் மேலசையும் அன்னங்காள் ! *
என் திருமார்வற்கு என்னை, இன்னவாறு இவள் காண்மினென்று *
மந்திரத் தொன்று உணர்த்தி யுரையீர், மறுமாற்றங்களே. 6.8.10
மாற்றங்க ளாய்ந்து கொண்டு, மதுசூத பிரானடி மேல் *
நாற்றங் கொள் பூம்பொழில் சூழ், குருகூர்ச் சடகோபன் சொன்ன *
தோற்றங்க ளாயிரத்துள், இவையு மொரு பத்தும் வல்லார் *
ஊற்றின் கண் நுண் மணல் போல், உருகா நிற்பர் நீராயே. 6.8.11