திருவாய்மொழி
ஆறாம் பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
நீராய் நிலனாய்த் தீயாய், காலாய் நெடுவானாய் *
சீரார் சுடர்கள் இரண்டாய்ச், சிவனாய் அயனானாய் ! *
கூராராழி வெண் சங்கேந்திக், கொடியேன் பால்
வாராய் * ஒரு நாள், மண்ணும் விண்ணும் மகிழவே. 6.9.1
மண்ணும் விண்ணும் மகிழக், குறளாய் வலங் காட்டி *
மண்ணும் விண்ணும் கொண்ட, மாய அம்மானே ! *
நண்ணி உனை நான், கண்டுகந்து கூத்தாட *
நண்ணி ஒரு நாள், ஞாலத்தூடே நடவாயே. 6.9.2
ஞாலத்தூடே நடந்தும், நின்றும் கிடந்திருந்தும் *
சாலப் பல நாள், உகந்தோறு உயிர்கள் காப்பானே !*
கோலத் திருமாமகளோடு, உன்னைக் கூடாதே *
சாலப் பல நாள், அடியேன் இன்னும் தளர்வேனோ ? 6.9.3
தளர்ந்தும் முறிந்தும், சகடவசுரர் உடல் வேறாப் *
பிளந்து வீயத், திருக்காலாண்ட பெருமானே ! *
கிளர்ந்து பிரமன் சிவன், இந்திரன் விண்ணவர் சூழ *
விளங்க ஒரு நாள், காண வாராய் விண் மீதே. 6.9.4
விண் மீதிருப்பாய் ! மலைமேல் நிற்பாய் ! கடற் சேர்ப்பாய் ! *
மண் மீதுழல்வாய் ! இவற்றுளெங்கும் மறைந்துறைவாய் ! *
எண் மீதியன்ற புறவண்டத்தாய் !, எனதாவி *
உள் மீதாடி, உருக் காட்டாதே ஒளிப்பாயோ ? 6.9.5 திருவேங்கடம் திருப்பதி,
திருப்பாற்கடல், பரமபதம்
பாயோரடி வைத்து, அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாய் * ஓரடியால், எல்லா உலகும் தடவந்த
மாயோன் !* உன்னைக் காண்பான், வருந்தி எனை நாளும் *
தீயோடு உடன் சேர் மெழுகாய், உலகில் திரிவேனோ ? 6.9.6
உலகில் திரியும் கரும கதியாய், உலகுமாய் *
உலகுக்கே ஓருயிருமானாய், புறவண்டத்து *
அலகில் பொலிந்த, திசை பத்தாய அருவேயோ ! *
அலகில் பொலிந்த, அறிவிலேனுக்கு அருளாயே. 6.9.7
அறிவிலேனுக்கு அருளாய், அறிவாருயிரானாய் ! *
வெறி கொள் சோதி மூர்த்தி !, அடியேன் நெடுமாலே ! *
கிறி செய்து என்னைப் புறத்திட்டு, இன்னம் கெடுப்பாயோ ? *
பிறிதொன்றறியா அடியேன், ஆவி திகைக்கவே. 6.9.8
ஆவி திகைக்க, ஐவர் குமைக்கும் சிற்றின்பம் *
பாவியேனைப், பல நீ காட்டிப் படுப்பாயோ? *
தாவி வையம் கொண்ட, தடந் தாமரைகட்கே *
கூவிக் கொள்ளும் காலம், இன்னம் குறுகாதோ ? 6.9.9
குறுகா நீளா, இறுதி கூடா எனையூழி *
சிறுகா பெருகா, அளவி லின்பம் சேர்ந்தாலும் *
மறு காலின்றி மாயோன் ! உனக்கே யாளாகும் *
சிறு காலத்தை யுறுமோ ? அந்தோ தெரியிலே. 6.9.10
தெரிதல் நினைதல், எண்ணலாகாத் திருமாலுக்கு *
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன், சடகோபன் *
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் *
உரிய தொண்டராக்கும், உலகமுண்டாற்கே. 6.9.11