திருவாய்மொழி
ஐந்தாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கைசெய்து *ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும் *
நிறந்தனுாடு புக்கு எனதாவியை நின்றுநின்று உருக்கி யுண்கின்ற * இச்
சிறந்த வான் சுடரே !, உன்னை என்று கொல் சேர்வதுவே ? 5.10.1
வதுவைவார்த்தையுள் ஏறுபாய்ந்ததும் மாயமாவினை வாய்பிளந்ததும் *
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் *
அதுவிதுவுதுவென்னலாவனவல்ல என்னை உன்செய்கை நைவிக்கும் *
முதுவைய முதல்வா! உன்னை என்று தலைப் பெய்வனே? 5.10.2
பெய்யும் பூங்குழல் பேய் முலையுண்ட
பிள்ளைத் தேற்றமும் * பேர்ந்தோர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் *
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள
நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்கப் *
பையவே நிலையும் வந்து என்னெஞ்சை உருக்குங்களே. 5.10.3
கள்ளவேடத்தைக் கொண்டு, போய்ப்புரம் புக்கவாறும் * கலந்தசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும் *
வெள்ளநீர்ச் சடையானும், நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் *
உள்ளமுள் குடைந்து என்னுயிரை உருக்கி உண்ணுமே. 5.10.4
உண்ண வானவர் கோனுக்கு ஆயர்ஒருப்படுத்த அடிசில் உண்டதும் *
வண்ண மால்வரையை யெடுத்து மழை காத்ததும் *
மண்ணை முன்படைத்துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள் *
எண்ணுந் தோறும் என்னெஞ்சு எரிவாய் மெழுகொக்கும் நின்றே. 5.10.5
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன *
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் *
நின்று நின்று நினைகின்றேன்
உன்னை எங்ஙனம் நினைகிற்பன் ? * பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட வொண் சுடரே ! 5.10.6
ஒண் சுடரோடிருளுமாய் நின்றவாறும்
உண்மையோடின்மையாய் வந்து * என்
கண் கொளா வகை நீ கரந்து என்னைச் செய்கின்றன *
எண்கொள் சிந்தையுள் நைகின்றேன் என்கரிய மாணிக்கமே ! * என்
கண்கட்குத் திண்கொள்ள, ஒருநாள் அருளாய் உன் திருவுருவே. 5.10.7
திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் * திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் *
பொருவிலுன் தனி நாயகமவை
கேட்குந் தோறும் என்னெஞ்சம் நின்று நெக்கு *
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே ? 5.10.8
அடியை மூன்றை இரந்தவாறும்
அங்கே நின்றாழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய * ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும் *
நொடியுமாறவை கேட்குந் தோறும்
என்னெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும் *
கொடிய வல்வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே? 5.10.9
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவருண்ண * அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் *
ஊடு புக்கு எனதாவியை உருக்கி யுண்டிடுகின்ற * நின் தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே ! 5.10.10
நாகணை மிசை நம்பிரான் சரணே,
சரண் நமக்கென்று * நாள் தொறும்
ஏகசிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன் *
ஆக நூற்ற வந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் *
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே. 5.10.11
*************