திருவாய்மொழி
ஐந்தாம் பத்து
நான்காம் திருவாய்மொழி
ஊரெல்லாம் துஞ்சி, உலகெல்லாம் நள்ளிருளாய் *
நீரெல்லாம் தேறி, ஓர் நீளிரவாய் நீண்டதால் *
பாரெல்லாம் உண்ட, நம் பாம்பணையான் வாரானால் *
ஆர்? எல்லே !, வல்வினையேன் ஆவி காப்பார் இனியே. 5.4.1
ஆவி காப்பார் இனியார் ? ஆழ் கடல் மண் விண் மூடி *
மாவிகாரமாய், ஓர் வல்லிரவாய் நீண்டதால் *
காவி சேர் வண்ணன், என் கண்ணனும் வாரானால் *
பாவியேன் நெஞ்சமே ! நீயும் பாங்கல்லையே. 5.4.2
நீயும் பாங்கல்லை காண், நெஞ்சமே ! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி, ஊழியாய் நீண்டதால் *
காயும் கடுஞ்சிலை, என் காகுத்தன் வாரானால் *
மாயும் வகை யறியேன், வல்வினையேன் பெண் பிறந்தே. 5.4.3
பெண் பிறந்தா ரெய்தும், பெருந் துயர் காண்கிலேனென்று *
ஒண்சுடரோன், வாரா தொளித்தான் * இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய், எங்காரேறு வாரானால் *
எண் பெரிய சிந்தை நோய், தீர்ப்பார் ஆர் என்னையே? 5.4.4
ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும் *
நீரென்னே ? என்னாதே, நீளிரவும் துஞ்சுவரால் *
காரன்ன மேனி, நம் கண்ணனும் வாரானால் *
பேர் என்னை மாயாதால், வல்வினையேன் பின்னின்றே. 5.4.5
பின் நின்ற காதல் நோய், நெஞ்சம் பெரிது அடுமால் *
முன்னின்று இரா வூழி, கண் புதைய மூடிற்றால் *
மன்னின்ற சக்கரத்து, எம் மாயவனும் வாரானால் *
இந்நின்ற நீளாவி, காப்பார் ஆர் இவ்விடத்தே ? 5.4.6
காப்பார் ஆர் இவ்விடத்துக்? கங்கிருளும் நுண்துளியாய்ச் *
சேட்பால தூழியாய்ச், செல்கின்ற கங்குல் வாய்த் *
தூப்பால வெண்சங்கு, சக்கரத்தன் தோன்றானால் *
தீப்பால வல்வினையேன், தெய்வங்காள் ! என் செய்கேனோ? 5.4.7
தெய்வங்காள் ! என் செய்கேன் ? ஓரிரவு ஏழுழியாய் *
மெய் வந்து நின்று எனது, ஆவி மெலிவிக்கும் *
கைவந்த சக்கரத்து, என் கண்ணனும் வாரானால் *
தைவந்த தண்தென்றல், வெஞ்சுடரில் தானடுமே. 5.4.8
வெஞ்சுடரில் தானடுமால், வீங்கிருளின் நுண்துளியாய் *
அஞ்சுடர வெய்யோன், அணிநெடுந்தேர் தோன்றாதால் *
செஞ்சுடர்த் தாமரைக் கண், செல்வனும் வாரானால் *
நெஞ்சிடர் தீர்ப்பார் இனியார்? நின்றுருகுகின்றேனே. 5.4.9
நின்றுருகுகின்றேனே போல, நெடுவானம்*
சென்றுருகி நுண்துளியாய்ச், செல்கின்ற கங்குல் வாய் *
அன்று ஒருகால், வையம் அளந்த பிரான் வாரானென்று *
ஒன்றொரு கால் சொல்லாது, உலகோ உறங்குமே. 5.4.10
உறங்குவான் போல், யோகு செய்த பெருமானைச் *
சிறந்த பொழில் சூழ், குருகூர்ச் சடகோபன் * சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி, ஆயிரத்து இப்பத்தால் *
இறந்து போய் வைகுந்தம், சேராவாறு எங்ஙனேயோ? 5.4.11