திருவாய்மொழி
ஐந்தாம் பத்து
ஆறாம் திருவாய்மொழி
கடல் ஞாலம் செய்தேனும் யானே யென்னும்
கடல் ஞாலமாவேனும் யானே யென்னும் *
கடல் ஞாலம் கொண்டேனும் யானே யென்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே யென்னும் *
கடல் ஞாலம் உண்டேனும் யானே யென்னும்
கடல் ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ ? *
கடல் ஞாலத்தீர்க்கு இவையென் சொல்லுகேன் ?
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே. 5.6.1
கற்கும் கல்விக்கு எல்லை யிலனே யென்னும்
கற்கும் கல்வியாவேனும் யானே யென்னும் *
கற்கும் கல்வி செய்வேனும் யானே யென்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே யென்னும் *
கற்கும் கல்விச் சாரமும் யானே யென்னும்
கற்கும் கல்வி நாதன் வந்தேறக் கொலோ? *
கற்கும் கல்வியீர்க்கு இவையென் சொல்லுகேன் ?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே. 5.6.2
காண்கின்ற நிலமெல்லாம் யானே யென்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே யென்னும் *
காண்கின்ற வெந்தீ யெல்லாம் யானே யென்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே யென்னும் *
காண்கின்ற கடலெல்லாம் யானே யென்னும்
காண்கின்ற கடல் வண்ணனேறக் கொலோ ? *
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் ?
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே. 5.6.3
செய்கின்ற கிதியெல்லாம் யானே யென்னும்
செய்வானின்றனகளும் யானே யென்னும் *
செய்து முன் இறந்தவும் யானே யென்னும்
செய்கைப் பயனுண்பேனும் யானே யென்னும் *
செய்வார்களைச் செய்வேனும் யானே யென்னும்
செய்ய கமலக் கண்ணனேறக் கொலோ ? *
செய்ய உலகத்தீர்க்கு இவையென் சொல்லுகேன் ?
செய்ய கனிவா யிளமான் திறத்தே. 5.6.4
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே யென்னும்
திறம்பாமல் மலை யெடுத்தேனே யென்னும் *
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே யென்னும்
திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே யென்னும் *
திறம்பாமல் கடல் கடைந்தேனே யென்னும்
திறம்பாத கடல் வண்ணனேறக் கொலோ ? *
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் ?
திறம்பாது என் திருமகள் எய்தினவே. 5.6.5
இனவேய் மலை யேந்தினேன் யானே யென்னும்
இனவேறுகள் செற்றேனும் யானே யென்னும் *
இனவான் கன்று மேய்த்தேனும் யானே யென்னும்
இனவாநிரை காத்தேனும் யானே யென்னும் *
இனவாயர் தலைவனும் யானே யென்னும்
இனத்தேவர் தலைவன் வந்தேறக் கொலோ? *
இனவேற்கண் நல்லீர்க்கு இவையென் சொல்லுகேன்?
இனவேற் கண்ணி என் மகள் உற்றனவே. 5.6.6
உற்றார்கள் எனக்கு இல்லை யாரு மென்னும்
உற்றார்கள் எனக்கு இங்கெல்லாரு மென்னும் *
உற்றார்களைச் செய்வேனும் யானே யென்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே யென்னும் *
உற்றார்களுக்கு உற்றேனும் யானே யென்னும்
உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ ? *
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் ?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே. 5.6.7
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே யென்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே யென்னும் *
உரைக்கின்ற அமரரும் யானே யென்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே யென்னும் *
உரைக்கின்ற முனிவரும் யானே யென்னும்
உரைக்கின்ற முகில் வண்ணனேறக் கொலோ ? *
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் ?
உரைக்கின்ற என்கோமள வொண் கொடிக்கே. 5.6.8
கொடிய வினை யாதுமிலனே யென்னும்
கொடிய வினை யாவேனும் யானே யென்னும் *
கொடிய வினை செய்வேனும் யானே யென்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே யென்னும் *
கொடியானிலங்கை செற்றேனும் யானே யென்னும்
கொடிய புள்ளுடையவனேறக் கொலோ ? *
கொடிய உலகத்தீர்க்கு இவையென் சொல்லுகேன் ?
கொடியேன் கொடி, என் மகள் கோலங்களே. 5.6.9
கோலம் கொள் சுவர்க்கமும் யானே யென்னும்
கோலமில் நரகமும் யானே யென்னும் *
கோலம் திகழ் மோக்கமும் யானே யென்னும்
கோலம் கொளுயிர்களும் யானே யென்னும் *
கோலம் கொள் தனிமுதல் யானே யென்னும்
கோலம் கொள் முகில் வண்ணனேறக் கொலோ ? *
கோலம் கொளுலகத்தீர்க்கு என் சொல்லுகேன் ?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே. 5.6.10
கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும்
குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை *
வாய்ந்த வழுதி வளநாடன், மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து *
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் * உலகில்
ஏய்ந்த பெருஞ் செல்வத்தராய்த், திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே. 5.6.11