திருவாய்மொழி
ஐந்தாம் பத்து
ஏழாம் திருவாய்மொழி
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும்
இனி உன்னை விட்டு * ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன், அரவினணை யம்மானே ! *
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவரமங்கலநகர் *
வீற்றிருந்த எந்தாய் ! உனக்கு மிகையல்லேனங்கே. 5.7.1 சிரீவரமங்கை
அங்குற்றேனல்லேன் இங்குற்றேனல்லேன், உன்னைக்
காணுமவாவில் வீழ்ந்து * நான்
எங்குற்றேனுமல்லேன், இலங்கை செற்ற அம்மானே ! *
திங்கள் சேர் மணிமாட நீடு, சிரீவரமங்கலநகருறை *
சங்கு சக்கரத்தாய் ! தமியேனுக் கருளாயே. 5.7.2 சிரீவரமங்கை
கருளப் புட்கொடி சக்கரப்படை வானநாட ! என்கார்முகில்வண்ணா !*
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் ! *
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவரமங்கலநகர்க்கு *
அருள் செய்து அங்கிருந்தாய்! அறியேன் ஒரு கைம்மாறே. 5.7.3 சிரீவரமங்கை
மாறு சேர் படை நூற்றுவர் மங்க,
ஓரைவர்க்கா யன்று மாயப் போர் பண்ணி *
நீறு செய்த எந்தாய் !, நிலங் கீண்ட அம்மானே ! *
தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச், சிரீவரமங்கல நகர் *
ஏறி வீற்றிருந்தாய் ! உன்னை எங்கெய்தக் கூவுவனே ? 5.7.4 சிரீவரமங்கை
எய்தக் கூவுதலாவதே எனக்கு? எவ்வதெவ்வத் துளாயுமாய் நின்று *
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே ! *
செய்த வேள்வியர் வையத் தேவரறாச், சிரீவரமங்கல நகர் *
கை தொழ இருந்தாய், அது நானும் கண்டேனே. 5.7.5 சிரீவரமங்கை
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே ! கண்ணா ! *
என்றும் என்னை யாளுடை
வான நாயகனே!, மணி மாணிக்கச் சுடரே ! *
தேனமாம் பொழில் தண், சிரீவர மங்கலத்தவர் கைதொழ வுறை *
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே. 5.7.6 சிரீவரமங்கை
வந்தருளி என்னெஞ்சிடங் கொண்ட, வானவர்
கொழுந்தே ! * உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே ! முழு வேழுலகு முண்டாய் ! *
செந்தொழிலவர் வேத வேள்வியறாச், சிரீவரமங்கலநகர் *
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே. 5.7.7 சிரீவரமங்கை
அகற்ற நீ வைத்த மாயவல் லைம்புலன்களா மவை நன்கறிந்தனன் *
அகற்றி என்னையும் நீ, அருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய் *
பகற்கதிர் மணிமாட நீடு, சிரீவரமங்கை வாணனே ! * என்றும்
புகற்கரிய எந்தாய் ! புள்ளின் வாய் பிளந்தானே ! 5.7.8 சிரீவரமங்கை
புள்ளின் வாய் பிளந்தாய் ! மருதிடை போயினாய் !
எருதேழடர்த்த * என்
கள்ள மாயவனே ! கரு மாணிக்கச் சுடரே ! *
தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார் மலி, தண் சிரீவரமங்கை
யுள் இருந்த எந்தாய் ! * அருளாய் உய்யுமாறு எனக்கே. 5.7.9 சிரீவரமங்கை
ஆறெனக்கு நின் பாதமே, சரணாகத் தந்தொழிந்தாய் *
உனக்கு ஓர் கைம்
மாறு நானொன்றிலேன், எனதாவியும் உனதே *
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி, தண் சிரீவரமங்கை *
நாறு பூந்தண் துழாய் முடியாய் ! தெய்வ நாயகனே ! 5.7.10 சிரீவரமங்கை
தெய்வ நாயகன் நாரணன், திரிவிக்கிரம னடியிணை மிசைக் *
கொய் கொள் பூம்பொழில் சூழ், குருகூர்ச் சடகோபன் *
செய்த ஆயிரத்துள்ளிவை, தண் சிரீவரமங்கை மேய பத்துடன் *
வைகல் பாட வல்லார், வானோர்க்கு ஆராவமுதே. 5.7.11 சிரீவரமங்கை