திருவாய்மொழி
ஐந்தாம் பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
மானேய் நோக்கு நல்லீர் ! வைகலும் வினையேன் மெலிய *
வானார் வண்கமுகும், மது மல்லிகை கமழும் *
தேனார் சோலைகள் சூழ், திருவல்லவாழ் உறையும்
கோனாரை * அடியேன் அடி கூடுவது, என்று கொலோ ? 5.9.1 திருவல்லவாழ்
என்று கொல்? தோழிமீர்காள்!, எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ ?*
பொன் திகழ் புன்னை மகிழ், புது மாதவி மீதணவி *
தென்றல் மணங்கமழும், திருவல்லவாழ் நகருள்
நின்ற பிரான் * அடிநீறு, அடியோம் கொண்டு சூடுவதே? 5.9.2 திருவல்லவாழ்
சூடுமலர்க்குழலீர் ! துயராட்டியேனை மெலிய *
பாடு நல் வேதவொலி, பரவைத் திரை போல் முழங்க *
மாடுயர்ந் தோமப் புகை கமழும், தண் திருவல்லவாழ் *
நீடுறைகின்ற பிரான் கழல், காண்டுங் கொல் நிச்சலுமே. 5.9.3 திருவல்லவாழ்
நிச்சலும் தோழிமீர்காள் ! எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ? *
பச்சிலை நீள் கமுகும், பலவும் தெங்கும் வாழைகளும் *
மச்சணி மாடங்கள் மீதணவும், தண் திருவல்லவாழ் *
நச்சரவினணை மேல், நம்பிரானது நன்னலமே. 5.9.4 திருவல்லவாழ்
நன்னலத் தோழிமீர்காள் ! நல்ல அந்தணர் வேள்விப் புகை *
மைந்நலங் கொண்டு, உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ் *
கன்னலங் கட்டி தன்னைக், கனியை இன்னமுதந் தன்னை *
என்னலங் கொள் சுடரை, என்று கொல் கண்கள் காண்பதுவே. 5.9.5 திருவல்லவாழ்
காண்பது எஞ்ஞான்றுகொலோ? வினையேன் கனிவாய்மடவீர் !*
பாண் குரல் வண்டினொடு, பசுந் தென்றலுமாகி எங்கும் *
சேண் சினை யோங்குமரச், செழுங் கானல் திருவல்லவாழ் *
மாண் குறள் கோலப் பிரான், மலர்த் தாமரைப் பாதங்களே. 5.9.6 திருவல்லவாழ்
பாதங்கள் மேலணி பூம்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர் ! *
ஓத நெடுந் தடத்துள், உயர் தாமரை செங்கழுநீர் *
மாதர்கள் வாண் முகமும், கண்ணு மேந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை, நாடொறுமே. 5.9.7 திருவல்லவாழ்
நாடொறும் வீடின்றியே, தொழக் கூடுங்கொல்? நல்நுதலீர் ! *
ஆடுறு தீங்கரும்பும், விளை செந்நெலுமாகி எங்கும் *
மாடுறு பூந்தடம் சேர் வயல்சூழ், தண் திருவல்லவாழ் *
நீடுறைகின்ற பிரான், நிலம் தாவிய நீள் கழலே. 5.9.8 திருவல்லவாழ்
கழல்வளை பூரிப்ப யாம் கண்டு, கைதொழக் கூடுங்கொலோ? *
குழலென்ன யாழுமென்னக், குளிர் சோலையுள் தேனருந்தி *
மழலை வரிவண்டுகள், இசை பாடும் திருவல்லவாழ் *
சுழலின் மலி சக்கரப் பெருமானது, தொல்லருளே. 5.9.9 திருவல்லவாழ்
தொல்லருள் நல்வினையால், சொலக்கூடுங்கொல் ? தோழிமீர்காள் ! *
தொல்லருள் மண்ணும் விண்ணும், தொழ நின்ற திருநகரம் *
நல்லருளாயிரவர் நலனேந்தும், திருவல்லவாழ் *
நல்லருள் நம்பெருமான், நாராயணன் நாமங்களே. 5.9.10 திருவல்லவாழ்
நாமங்களாயிரமுடைய, நம்பெருமானடி மேல் *
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன், தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும், திருவல்லவாழ் *
சேமங்கொள் தென்னகர் மேல், செப்புவார் சிறந்தார் பிறந்தே. 5.9.11 திருவல்லவாழ்