திருவாய்மொழி
ஏழாம் பத்து
முதல் திருவாய்மொழி
உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் *
நண்ணிலா வகையே நலிவான் இன்னு மெண்ணுகின்றாய் *
எண்ணிலாப் பெருமாயனே! இமையோர்களேத்தும் உலகம்மூன்றுடை *
அண்ணலே ! அமுதே ! அப்பனே ! என்னை யாள்வானே ! 7.1.1
என்னை யாளும் வன் கோ
ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோதுவித்திட்டு *
உன்னை நான் அணுகா வகை செய்து, போதி கண்டாய் *
கன்னலே அமுதே ! கார்முகில் வண்ணனே ! கடல்ஞாலம் காக்கின்ற *
மின்னு நேமியினாய் ! வினையேனுடை வேதியனே ! 7.1.2
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து * உன்திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி ? அந்தோ ! *
ஆதியாகி அகலிடம் படைத்து உண்டுமிழ்ந்து கடந்திடந்திட்ட *
சோதி நீள் முடியாய் ! தொண்டனேன் மதுசூதனனே ! 7.1.3
சூது நான் அறியாவகை சுழற்றி ஓரைவரைக் காட்டி * உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து, போதி கண்டாய் *
யாதும் யாவருமின்றி நின்னகம் பாலொடுக்கி * ஓராலின் நீளிலை
மீது சேர் குழவி ! வினையேன் வினை தீர் மருந்தே ! 7.1.4
தீர்மருந்தின்றி ஐந்துநோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை *
நேர் மருங்கு டைத்தா வடைத்து நெகிழ்ப்பா னொக்கின்றாய் *
ஆர்மருந்து இனியாகுவார்? அடலாழி யேந்தி அசுரர் வன் குலம் *
வேர் மருங் கறுத்தாய் ! விண்ணுளார் பெருமானேயோ ! 7.1.5
விண்ணுளார் பெருமாற்கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை *
மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா, மற்று நீயும் விட்டால் ? *
பண்ணுளாய்! கவிதன்னுளாய்! பத்தியினுள்ளாய்! பரமீசனே! *வந்தென்
கண்ணுளாய் ! நெஞ்சுளாய் ! சொல்லுளாய் ! ஒன்று சொல்லாயே. 7.1.6
ஒன்று சொல்லி ஒருத்தனில் நிற்கிலாத ஓரைவர் வன் கயவரை *
என்று யான் வெல்கிற்பன், உன் திருவரு ளில்லையேல் ? *
அன்று தேவர் அசுரர் வாங்க, அலை கடலரவ மளாவி * ஓர்
குன்றம் வைத்த எந்தாய் ! கொடியேன் பருகு இன்னமுதே. 7.1.7
இன்னமுதெனத் தோன்றி ஓரைவர் யாவரையும் மயக்க * நீ வைத்த
முன்ன மாயமெல்லாம் முழுவே ரரிந்து * என்னை உன்
சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்தேத்திக் கைதொழவே அருளெனக்கு*
என்னம்மா ! என் கண்ணா ! இமையோர் தம் குலமுதலே ! 7.1.8
குலமுதலடும் தீவினைக் கொடுவன் குழியினில் வீழ்க்கு மைவரை *
வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய் *
நிலமுதலினி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வனவெனப் * பொருள்
பல முதல் படைத்தாய் ! என் கண்ணா ! என் பரஞ்சுடரே ! 7.1.9
என்பரஞ்சுடரே! என்று உன்னை யலற்றி உன் இணைத்தாமரைகட்கு *
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் *
வன்பரங்களெடுத்து ஐவர் திசை திசை வலித்தெற்றுகின்றனர் *
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ ! 7.1.10
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்
குணங்கள் படைத்தளித்துக் கெடுக்கும் * அப்
புண்டரீகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி யப்பனுக்கே *
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்
சடகோபன் சொல்லாயிரத்துள் இப்பத்தும் *
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே. 7.1.11