திருவாய்மொழி
ஏழாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி
இன்பம் பயக்க, எழில் மலர் மாதரும்
தானும் * இவ்வேழுலகை
இன்பம் பயக்க, இனிதுடன் வீற்றிருந்து
ஆள்கின்ற எங்கள் பிரான் *
அன்புற்றமர்ந் துறைகின்ற
அணி பொழில் சூழ் திருவாறன்விளை *
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து
கைதொழு நாள்களு மாகுங் கொலோ ? 7.10.1 திருவாறன்விளை
ஆகுங் கொல் ? ஐயமொன்றின்றி
அகலிடம் * முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த
திருக்குறளப்பன் அமர்ந்துறையும் *
மாகம் திகழ் கொடி மாடங்கள்,
நீடு மதிள் திருவாறன்விளை *
மாகந்த நீர் கொண்டு தூவி, வலஞ் செய்து
கை தொழக் கூடுங் கொலோ ? 7.10.2 திருவாறன்விளை
கூடுங் கொல் வைகலும்
கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை *
ஆடும் பறவை மிசைக் கண்டு
கை தொழுதன்றி, அவனுறையும் *
பாடும் பெரும் புகழ் நான்மறை, வேள்வி
யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ் *
நீடு பொழில் திருவாறன்விளை தொழ
வாய்க்குங் கொல்? நிச்சலுமே. 7.10.3 திருவாறன்விளை
வாய்க்குங் கொல்? நிச்சலும்
எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற *
வாய்க்கும் கரும்பும் பெருஞ் செந்நெலும்
வயல் சூழ் திருவாறன்விளை *
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன்
வடமதுரைப் பிறந்த *
வாய்க்கும் மணிநிறக் கண்ணபிரான் தன்
மலரடிப் போதுகளே. 7.10.4 திருவாறன்விளை,
வடமதுரை
மலரடிப் போதுகள், என்னெஞ்சத்து
எப்பொழுதும் இருத்தி வணங்க *
பலரடியார் முன்பருளிய
பாம்பணை யப்பன் அமர்ந்துறையும் *
மலரின் மணி நெடு மாடங்கள்
நீடு மதிள் திருவாறன்விளை *
உலகமலி புகழ்பாட
நம்மேல் வினையொன்றும் நில்லா கெடுமே. 7.10.5 திருவாறன்விளை
ஒன்று நில்லா கெடும் முற்றவும் தீவினை
உள்ளித் தொழுமின் தொண்டீர் ! *
அன்றங்கமர் வென்று, உருப்பிணி நங்கை
அணிநெடுந் தோள் புணர்ந்தான் *
என்று மெப்போது மென்னெஞ்சம் துதிப்ப
உள்ளே யிருக்கின்ற பிரான் *
நின்ற அணி திருவாறன்விளை
யென்னும் நீள் நகரமதுவே. 7.10.6 திருவாறன்விளை
நீணகர மதுவே மலர்ச் சோலைகள் சூழ்
திருவாறன்விளை *
நீணகரத் துறைகின்ற பிரான்
நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் *
வாண புரம் புக்கு முக்கட் பிரானைத்
தொலைய வெம் போர்கள் செய்து *
வாணனை ஆயிரந் தோள் துணித்தான்
சரணன்றி, மற்றொன்றிலமே. 7.10.7 திருவாறன்விளை
அன்றி மற்றொன்றிலம் நின் சரணே யென்று
அகலிரும் பொய்கையின் வாய் *
நின்று தன் நீள் கழலேத்திய
ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் *
சென்று அங்கி னிதுறைகின்ற
செழும் பொழில் சூழ் திருவாறன் விளை
ஒன்றி * வலஞ் செய்ய ஒன்றுமோ ?
தீவினை உள்ளத்தின் சார்வல்லவே. 7.10.8 திருவாறன்விளை
தீவினை உள்ளத்தின் சார்வல்லவாகித்
தெளி விசும்பே றலுற்றால் *
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்
அமைந்த தொழிலினுள்ளும் நவின்று *
யாவரும் வந்து வணங்கும் பொழில்
திருவாறன்விளை யதனை *
மேவி வலஞ் செய்து கை தொழக் கூடுங் கொல்?
என்னும் என் சிந்தனையே. 7.10.9 திருவாறன்விளை
சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை
தேவபிரானறியும் *
சிந்தையினால் செய்வதானறியாதன
மாயங்கள் ஒன்றுமில்லை *
சிந்தையினால் சொல்லினால் செய்கையால்
நிலத்தேவர் குழு வணங்கும் *
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை
தீர்த்தனுக்கு அற்ற பின்னே. 7.10.10 திருவாறன்விளை
தீர்த்தனுக் கற்ற பின்
மற்றோர் சரணில்லை யென்றெண்ணித் *
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனனாகிச்
செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன *
தீர்த்தங்க ளாயிரத்துள்
இவை பத்தும் வல்லார்களை *
தேவர் வைகல் தீர்த்தங்களே யென்று பூசித்து
நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே. 7.10.11 திருவாறன்விளை
*********