திருவாய்மொழி
ஏழாம் பத்து
மூன்றாம் திருவாய்மொழி
வெள்ளைச் சுரிசங்கொடாழி யேந்தித்
தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே *
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்
என் சொல்லிச் சொல்லுகேன் ? அன்னைமீர்காள் !*
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத வொலியும் விழா வொலியும் *
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்
திருப்பேரையில் சேர்வன் நானே. 7.3.1 திருப்பேரை
நானக் கருங்குழல் தோழிமீர்காள் !
அன்னையர்காள் ! அயற்சேரியீர்காள் ! *
நான் இத்தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசமன்றிது இராப் பகல் போய் *
தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ்
தென் திருப்பேரையில் வீற்றிருந்த *
வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே. 7.3.2 திருப்பேரை
செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடித் தாழ்ந்ததாயும் *
சங்கொடு சக்கரம் கண்டுகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் *
திங்களும் நாளும் விழாவறாத
தென் திருப்பேரையில் வீற்றிருந்த *
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ !
நாணும் நிறையும் இழந்ததுவே. 7.3.3 திருப்பேரை
இழந்த எம்மாமை திறத்துப் போன
என் நெஞ்சினாரும் அங்கே யொழிந்தார் *
உழந்து இனியாரைக் கொண்டு என் உசாகோ?
ஓதக் கடலொலி போல * எங்கும்
எழுந்த நல் வேதத்தொலி நின்றோங்கு
தென் திருப்பேரையில் வீற்றிருந்த *
முழங்கு சங்கக் கையன் மாயத் தாழ்ந்தேன்
அன்னையர்காள் ! என்னை என் முனிந்தே ? 7.3.4 திருப்பேரை
முனிந்து சகடமுதைத்து மாயப் பேய்
முலையுண்டு மருதிடை போய்க்*
கனிந்த விளவுக்குக் கன்றெறிந்த
கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் *
முனிந்து இனியென் செய்தீர் ? அன்னைமீர்காள் !
முன்னி அவன் வந்து வீற்றிருந்த *
கனிந்த பொழில் திருப்பேரையிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே. 7.3.5 திருப்பேரை
காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால் *
நீலமுகில் வண்ணத் தெம்பெருமான்
நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் *
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த
நான்மறை யாளரும் வேள்வி யோவா *
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப்பேரையிற்கே. 7.3.6 திருப்பேரை
பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான், வந்து வீற்றிருந்த *
பேரையிற்கே புக்கு என்னெஞ்சம் நாடிப்
பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன் *
ஆரை இனி இங்குடையம் ? தோழி !
என்னெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை *
ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது ?
என்னெஞ்சம் கண்டதுவே கண்டேனே. 7.3.7 திருப்பேரை
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக்
கொண்டு * அலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ ! *
மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்
நீள்விசும்பும் கழியப் பெரிதால் *
தெண்திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த
தென் திருப்பேரையில் சேர்வன் சென்றே. 7.3.8 திருப்பேரை
சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள் !
அன்னையர்காள் ! என்னைத் தேற்ற வேண்டா *
நீர்களுரைக்கின்றது என் இதற்கு ?
நெஞ்சும் நிறைவும் எனக்கிங்கில்லை *
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலமுண்ட
கண்ணபிரான் வந்து வீற்றிருந்த *
ஏர்வள வொண் கழனிப் பழனத்
தென் திருப்பேரையின் மாநகரே. 7.3.9 திருப்பேரை
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நானெனக்கில்லை என்தோழிமீர்காள்! *
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப்பேரையில் வீற்றிருந்த *
மகர நெடுங் குழைக் காதன் மாயன்
நூற்றுவரை அன்று மங்க நூற்ற *
நிகரில் முகில் வண்ணன் நேமியான், என்
நெஞ்சம் கவர்ந்து எனையூழியானே ? 7.3.10 திருப்பேரை
ஊழி தோறூழி உருவும் பேரும்
செய்கையும், வேறவன் வையம் காக்கும் *
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன *
கேழிலந்தாதி ஓராயிரத்துள் இவை
திருப் பேரையில் மேய பத்தும் *
ஆழியங் கையனை ஏத்த வல்லாரவர்
அடிமைத் திறத்தாழியாரே. 7.3.11 திருப்பேரை