திருவாய்மொழி
ஏழாம் பத்து
எட்டாம் திருவாய்மொழி
மாயா ! வாமனனே !, மதுசூதா ! நீயருளாய் *
தீயாய் நீராய் நிலனாய், விசும்பாய்க் காலாய்த் *
தாயாய்த் தந்தையாய், மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் *
நீயாய் நீ நின்றவாறு, இவையென்ன நியாயங்களே. 7.8.1
அங்கண் மலர்த் தண் துழாய் முடி, அச்சுதனே ! அருளாய் *
திங்களும் ஞாயிறுமாய்ச், செழும்பல் சுடராய் இருளாய்ப் *
பொங்கு பொழி மழையாய்ப், புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ *
வெங்கண் வெங்கூற்றமுமாய், இவையென்ன விசித்திரமே ! 7.8.2
சித்திரத் தேர்வலவா! திருச்சக்கரத்தாய் ! அருளாய் *
எத்தனை யோருகமும் அவையாய், அவற்றுள் இயலும் *
ஒத்த வொண்பல் பொருள்கள், உலப்பில்லனவாய் வியவாய் *
வித்தகத்தாய் நிற்றி நீ, இவையென்ன விடமங்களே ! 7.8.3
கள்ளவிழ் தாமரைக்கண், கண்ணனே! எனக்கு ஒன்றுஅருளாய் *
உள்ளதும் இல்லதுமாய், உலப்பில்லனவாய் வியவாய் *
வெள்ளத் தடங்கடலுள், விட நாகணை மேல் மருவி *
உள்ளப் பல் யோகு செய்தி, இவையென்ன உபாயங்களே ! 7.8.4
பாசங்கள் நீக்கி, என்னை உனக்கே அறக் கொண்டிட்டு * நீ
வாச மலர்த் தண்துழாய் முடி மாயவனே ! அருளாய் *
காயமும் சீவனுமாய்க், கழிவாய்ப் பிறப்பாய்ப் * பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி, இவை யென்ன மயக்குக்களே ! 7.8.5
மயக்கா வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்று அருளாய் *
அயர்ப்பாய்த் தேற்றமுமாய், அழலாய்க் குளிராய் வியவாய் *
வியப்பாய், வென்றிகளாய் வினையாய்ப் பயனாய் * பின்னும் நீ
துயக்காய் நீ நின்றவாறு, இவை யென்ன துயரங்களே ! 7.8.6
துயரங்கள் செய்யும் கண்ணா ! சுடர்நீள்முடியாய் ! அருளாய் *
துயரம் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த் *
துயரம் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த் *
துயரங்கள் செய்து வைத்தி இவை யென்ன சுண்டாயங்களே ! 7.8.7
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் ? என்னையாளும் கண்ணா ! *
இன்னதோர் தன்மையை யென்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை *
முன்னிய மூவுலகு மவையாய் அவற்றைப் படைத்துப் *
பின்னும் உள்ளாய் ! புறத்தாய் ! இவை யென்ன இயற்கைகளே ! 7.8.8
என்ன இயற்கைகளால், எங்ஙனே நின்றிட்டாய் ? என் கண்ணா ! *
துன்னு கர சரணம் முதலாக, எல்லா வுறுப்பும் *
உன்னு சுவை யொளி, ஊறொலி நாற்றம் முற்றும் நீயே *
உன்னை யுணரவுறில், உலப்பில்லை நுணுக்கங்களே. 7.8.9
இல்லை நுணுக்கங்களே இதனிற் பிறிதென்னும் வண்ணம் *
தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீயே *
அல்லித் துழாயலங்கல் அணிமார்ப ! என் அச்சுதனே ! *
வல்லதோர் வண்ணம்சொன்னால் அதுவேஉனக்கு ஆம்வண்ணமே. 7.8.10
ஆம்வண்ணம் இன்னதொன்றென்று அறிவதரிய அரியை *
ஆம்வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்துரைத்த *
ஆம்வண்ண வொண் தமிழ்கள் இவை யாயிரத்துள் இப்பத்தும் *
ஆம்வண்ணத்தாலுரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே. 7.8.11