திருவாய்மொழி
எட்டாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி
நெடுமாற்கு அடிமை செய்வேன்போல் அவனைக்கருத வஞ்சித்துத் *
தடுமாற்றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால் *
கொடுமா வினையேன், அவனடியா ரடியே கூடும் இதுவல்லால் *
விடுமா றென்பதென் ? அந்தோ ! வியன் மூவுலகு பெறினுமே. 8.10.1
வியன் மூவுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும் *
புயல் மேகம் போல் திருமேனி யம்மான் புனை பூங்கழலடிக் கீழ்ச் *
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி * இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே ? 8.10.2
உறுமோ பாவியேனுக்கு? இவ்வுலகம் மூன்றும் உடன் நிறையச் *
சிறுமா மேனி நிமிர்த்த என் செந்தாமரைக் கண் திருக்குறளன் *
நறுமா விரை நாள் மலரடிக் கீழ்ப் புகுதல், அன்றி அவனடியார் *
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே. 8.10.3
இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றென்? இருமாநிலம் முன்னுண்டுமிழ்ந்த *
செங்கோலத்த பவளவாய்ச் செந்தாமரைக் கணென்னம்மான் *
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன் கொள்வடிவு என்மனத்ததாய் *
அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட்டோட அருளிலே. 8.10.4
வழிபட்டோட அருள் பெற்று மாயன் கோல மலரடிக் கீழ்ச் *
சுழிபட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்றிருந்தாலும் *
இழிபட்டோடும் உடலினில் பிறந்து தன் சீரியான் கற்று *
மொழி பட்டோடும் கவியமுதம் நுகர்ச்சி யுறுமோ? முழுதுமே. 8.10.5
நுகர்ச்சி யுறுமோ?, மூவுலகின் வீடு பேறு தன் கேழில் *
புகர்ச் செம்முகத்த களிறட்ட, பொன்னாழிக்கை என்னம்மான் *
நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள், நீண்ட அசுரருயிரெல்லாம் *
தகர்த்துண் டுழலும் புட்பாகன், பெரிய தனி மாப்புகழே. 8.10.6
தனிமாப் புகழே எஞ்ஞான்றும், நிற்கும்படியாய்த் தான்தோன்றி *
முனிமாப் பிரம முதல்வித்தாய், உலக மூன்றும் முளைப்பித்த *
தனிமாத் தெய்வத் தளிரடிக் கீழ்ப் புகுதலன்றி, அவனடியார் *
நனிமாக் கலவி யின்பமே, நாளும் வாய்க்க நங்கட்கே. 8.10.7
நாளும் வாய்க்க நங்கட்கு, நளிநீர்க் கடலைப் படைத்துத் * தன்
தாளும் தோளும் முடிகளும், சமனிலாத பல பரப்பி *
நீளும் படர் பூங்கற்பகக் காவும், நிறை பல்நாயிற்றின் *
கோளுமுடைய மணிமலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே. 8.10.8
தமர்கள் கூட்ட வல்வினையை, நாசம் செய்யும் சதுமூர்த்தி *
அமர் கொளாழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன் *
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை, கோதிலடியார் தம் *
தமர்கள் தமர்கள் தமர்களாம், சதிரே வாய்க்க தமியேற்கே. 8.10.9
வாய்க்க தமியேற்கு ஊழிதோ றூழியூழி * மாகாயாம்
பூக்கொள் மேனி, நான்கு தோள் பொன்னாழிக் கை என்னம்மான் *
நீக்கமில்லா அடியார்தம், அடியா ரடியா ரடியார் எங்
கோக்கள் * அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே. 8.10.10
நல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த *
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன் *
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் *
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே. 8.10.11
**********