திருவாய்மொழி
எட்டாம் பத்து
ஐந்தாம் திருவாய்மொழி
மாயக்கூத்தா ! வாமனா ! வினையேன் கண்ணா ! கண் கை கால் *
தூய செய்ய மலர்களாச், சோதிச் செவ்வாய் முகிழதா *
சாயல் சாமத்திருமேனி, தண்பாசடையா * தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே !, ஒரு நாள் காண வாராயே. 8.5.1
காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் *
நாணி நன்னாட்டு அலமந்தால் இரங்கி ஒருநாள் நீ அந்தோ! *
காண வாராய் கருநாயி றுதிக்கும் கருமா மாணிக்க
நாள்நல் மலைபோல் * சுடர்ச்சோதி முடிசேர் சென்னியம்மானே ! 8.5.2
முடிசேர் சென்னியம்மா ! நின்மொய் பூந்தாமத் தண்துழாய் *
கடி சேர் கண்ணிப் பெருமானே ! என்றென்றேங்கி அழுதக்கால் *
படி சேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால் தோளும் *
துடிசேரிடையு மமைந்தது ஓர் தூநீர் முகில் போல் தோன்றாயே. 8.5.3
தூநீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனிவாயும் *
தேநீர்க் கமலக் கண்களும் வந்து என்சிந்தை நிறைந்தவா ! *
மாநீர் வெள்ளி மலை தன்மேல் வண்கார் நீலமுகில் போலத் *
தூநீர்க் கடலுள் துயில்வானே ! எந்தாய் ! சொல்ல மாட்டேனே. 8.5.4 திருப்பாற்கடல்
சொல்ல மாட்டேன் அடியேன் உன்துளங்குசோதித் திருப்பாதம் *
எல்லையில் சீரிள ஞாயிறு இரண்டு போலென்னுள்ளவா ! *
அல்லலென்னும் இருள் சேர்தற்கு உபாயமென்னே ? * ஆழிசூழ்
மல்லை ஞாலமுழுதுண்ட மாநீர்க் கொண்டல் வண்ணனே ! 8.5.5
கொண்டல்வண்ணா!குடக்கூத்தா! வினையேன்கண்ணா! கண்ணா!*என்
அண்டவாணா !* என்று, என்னை ஆளக் கூப்பிட்டழைத்தக்கால் *
விண்தன்மேல் தான் மண்மேல்தான் ! விரிநீர்க்கடல்தான் மற்றுத்தான் *
தொண்டனேன் உன் கழல் காண ஒருநாள் வந்து தோன்றாயே. 8.5.6
வந்து தோன்றாயன்றேல், உன் வையம் தாய மலரடிக்கீழ் *
முந்தி வந்து யான் நிற்ப, முகப்பே கூவிப் பணி கொள்ளாய் *
செந்தண் கமலக் கண்கைகால், சிவந்த வாயோர் கருநாயிறு *
அந்தமில்லாக் கதிர் பரப்பி, அலர்ந்ததொக்கும் அம்மானே. 8.5.7
ஒக்குமம்மா னுருவமென்று உள்ளங் குழைந்து நாணாளும் *
தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந் தோறும் தொலைவன் நான் *
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாய *
புக்க நல் தேர்த் தனிப்பாகா ! வாராய், இதுவோ பொருத்தமே ? 8.5.8
இதுவோ பொருத்தம்? மின்னாழிப் படையாய் ! ஏறுமிருஞ் சிறைப்புள்
அதுவே * கொடியா வுயர்த்தானே ! என்றென்று ஏங்கி யழுதக்கால் *
எதுவேயாகக் கருதுங் கொல்? இம்மாஞாலம் பொறை தீர்ப்பான் *
மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே. 8.5.9 வடமதுரை
பிறந்த மாயா ! பாரதம் பொருத மாயா ! நீ இன்னே *
சிறந்த கால் தீ நீர் வான், மண் பிறவுமாய பெருமானே ! *
கறந்த பாலுள் நெய்யே போல், இவற்றுளெங்கும் கண்டு கொள் *
இறந்து நின்ற பெருமாயா! உன்னை எங்கே காண்கேனே? 8.5.10
எங்கே காண்கேன் ! ஈன்துழாயம்மான்
தன்னை, யான் ? என்றென்று *
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன் *
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் *
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியுங் காலையே. 8.5.11