திருவாய்மொழி
இரண்டாம் பத்து
ஆறாம் திருவாய்மொழி
வைகுந்தா ! மணிவண்ணனே !
என் பொல்லாத் திருக்குறளா ! என்னுள் மன்னி *
வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே ! *
செய்கும் தாவருந்தீமை உன்னடியார்க்குத்
தீர்த்து, அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா ! * உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே. 2.6.1
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே * உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின் *
மிக்கஞானவெள்ளச் சுடர்விளக்காய்த் துளக்கற்று அமுதமாய் * எங்கும்
பக்கம் நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே. 2.6.2
தாமரைக்கண்ணனை
விண்ணோர் பரவும் தலைமகனைத் * துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன் மலையை *
நாமருவி நன்கேத்தி உள்ளி வணங்கி
நாம் மகிழ்ந்தாட * நாவலர்
பாமருவி நிற்கத் தந்த பான்மையேய் வள்ளலே ! 2.6.3
வள்ளலே ! மதுசூதனா ! என்மரதகமலையே ! * உன்னை நினைந்து
எள்கல் தந்த எந்தாய் ! உன்னை எங்ஙனம் விடுகேன் ? *
வெள்ளமே புரை நின்புகழ் குடைந்தாடிப் பாடிக்களித்து உகந்துகந்து *
உள்ள நோய்களெல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே. 2.6.4
உய்ந்து போந்து என்னுலப்பிலாத
வெந்தீவினைகளை நாசஞ் செய்து * உனது
அந்தமி லடிமை அடைந்தேன் விடுவேனோ ? *
ஐந்து பைந்தலையா டரவணை மேவிப்
பாற்கடல் யோக நித்திரை *
சிந்தை செய்த எந்தாய் ! உன்னைச் சிந்தை செய்து செய்தே. 2.6.5 திருப்பாற்கடல்
உன்னைச் சிந்தை செய்து செய்து
உன் நெடுமா மொழி இசை பாடியாடி * என்
முன்னைத் தீவினைகள் முழு வேரரிந்தனன் யான் *
உன்னைச் சிந்தையினா லிகழ்ந்த
இரணியனகல் மார்வம் கீண்ட * என்
முன்னைக் கோளரியே * முடியாததென் எனக்கே ? 2.6.6
முடியாததென் எனக்கேல் இனி ?
முழுவேழுலகும் உண்டான் * உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானு மல்லன் இனிச் *
செடியார் நோய்களெல்லாம் துரந்து
எமர் கீழ் மேலெழு பிறப்பும் *
விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே. 2.6.7
மாறிமாறிப் பலபிறப்பும்பிறந்து அடியையடைந்து உள்ளம்தேறி *
ஈறிலின்பத் திருவெள்ளம் யான் மூழ்கினன் *
பாறிப்பாறி அசுரர்தம் பல்குழாங்கள் நீறெழப் * பாய்பறவை யொன்று
ஏறி வீற்றிருந்தாய் ! உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் ! 2.6.8
எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய்!
இலங்கை செற்றாய் * மராமரம்
பைந்தாளேழுருவ ஒரு வாளி கோத்த வில்லா !*
கொந்தார் தண்ணந் துழாயினாய் ! அமுதே !
உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா !* வானேறே ! இனி எங்குப் போகின்றதே? 2.6.9 திருவேங்கடம் திருப்பதி
போகின்ற காலங்கள் போய காலங்கள்
போகு காலங்கள் * தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் !* உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?*
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்
நாதனே ! பரமா * தண்வேங்கடம்
மேகின்றாய் !* தண்துழாய் விரை நாறு கண்ணியனே ! 2.6.10 திருவேங்கடம் திருப்பதி
கண்ணித் தண்ணந் துழாய் முடிக்
கமலத்தடம் பெருங்கண்ணனைப் * புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன *
எண்ணில் சோர்விலந்தாதி
ஆயிரத்துள், இவையும் ஓர் பத்து * இசையொடும்
பண்ணில் பாட வல்லாரவர் கேசவன் தமரே. 2.6.11