திருவாய்மொழி
இரண்டாம் பத்து
முதல் திருமொழி
வாயும் திரையுகளும் கானல், மடநாராய் ! *
ஆயும் அமருலகும் துஞ்சிலும், நீ துஞ்சாயால் *
நோயும் பயலைமையும், மீதூர எம்மே போல் *
நீயும் திருமாலால், நெஞ்சம் கோட்பட்டாயே. 2.1.1
கோட்பட்ட சிந்தையையாய்க், கூர்வாய அன்றிலே !
சேட்பட்ட யாமங்கள் சேராது, இரங்குதியால் *
ஆட்பட்ட எம்மே போல் நீயும், அரவணையான்
தாட்பட்ட * தண்துழாய்த் தாமம், காமுற்றாயே? 2.1.2
காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் * கண்துயிலாய், நெஞ்சுருகி ஏங்குதியால் *
தீ முற்றத் தென்னிலங்கை, ஊட்டினான் தாள் * நயந்த
யாமுற்றது உற்றாயோ? வாழி கனைகடலே ! 2.1.3
கடலும் மலையும் விசும்பும் துழாய், எம்போல் *
சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால், தண்வாடாய் ! *
அடல் கொள் படையாழி அம்மானைக் காண்பான் நீ *
உடலம் நோயுற்றாயோ ? ஊழிதோறூழியே. 2.1.4
ஊழிதோறூழி, உலகுக்கு நீர் கொண்டு *
தோழியரும் யாமும் போல், நீராய் நெகிழ்கின்ற *
வாழிய வானமே ! நீயும் மதுசூதன் *
பாழிமையில் பட்டு, அவன் கண் பாசத்தால் நைவாயே? 2.1.5
நைவாய எம்மே போல், நாள்மதியே ! * நீ இந்நாள்
மைவானிருளகற்றாய், மாழாந்து தேம்புதியால் *
ஐவாயரவணைமேல், ஆழிப்பெருமானார்
மெய்வாசகம் கேட்டு * உன் மெய் நீர்மை தோற்றாயே? 2.1.6
தோற்றோம் மடநெஞ்சம், எம்பெருமான் நாரணற்கு * எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை, நீ நடுவே *
வேற்றோர் வகையில் கொடிதாய், எனையூழி *
மாற்றாண்மை நிற்றியோ ? வாழி கனையிருளே ! 2.1.7
இருளின் திணிவண்ணம், மாநீர்க்கழியே ! * போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும், நீ துஞ்சாயால் *
உருளும் சகடமுதைத்த, பெருமானார்
அருளின் பெரு நசையால் * ஆழாந்து, நொந்தாயே ? 2.1.8
நொந்தாராக் காதல்நோய், மெல்லாவி உள்ளுலர்த்த *
நந்தா விளக்கமே ! நீயும் அளியத்தாய் *
செந்தாமரைத் தடங்கண், செங்கனிவாய் எம்பெருமான் *
அந்தாமத் தண்துழாய் ஆசையால், வேவாயே. 2.1.9
வேவாரா வேட்கை நோய், மெல்லாவி யுள்ளுலர்த்த *
ஓவாது இராப்பகல், உன் பாலே வீழ்த்தொழிந்தாய் *
மாவாய் பிளந்து, மருதிடை போய் * மண்ணளந்த
மூவா முதல்வா ! இனி, எம்மைச் சோரேலே. 2.1.10
சோராத எப்பொருட்கும், ஆதியாம் சோதிக்கே *
ஆராத காதல், குருகூர்ச் சடகோபன் *
ஓராயிரம் சொன்ன, அவற்றுள் இவை பத்தும் *
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம், திண்ணனவே. 2.1.11