திருவாய்மொழி
இரண்டாம் பத்து
ஐந்தாம் திருவாய்மொழி
அந்தாமத் தன்பு செய்து, என்னாவி சேர் அம்மானுக்கு *
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள *
செந்தாமரைத் தடங்கண், செங்கனி வாய் செங்கமலம் *
செந்தாமரை யடிக்கள், செம்பொன் திருவுடம்பே. 2.5.1
திருவுடம்பு வான் சுடர், செந்தாமரை கண் கை கமலம் *
திருவிடமே மார்வம், அயனிடமே கொப்பூழ் *
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு, அரனே ஓ ! *
ஒருவிட மொன்றின்றி, என்னுள் கலந்தானுக்கே. 2.5.2
என்னுள் கலந்தவன், செங்கனி வாய் செங்கமலம் *
மின்னும் சுடர்மலைக்குக், கண் பாதம் கை கமலம் *
மன்னு முழுவேழுலகும், வயிற்றினுள *
தன்னுள் கலவாதது, எப்பொருளும் தானில்லையே. 2.5.3
எப்பொருளும் தானாய், மரதகக் குன்றமொக்கும் *
அப்பொழுதைத் தாமரைப்பூ, கண் பாதம் கை கமலம் *
எப்பொழுதும் நாள் திங்கள், ஆண்டு ஊழியூழி தொறும் *
அப்பொழுதைக் கப்பொழுது, என்னாராவமுதமே. 2.5.4
ஆராவமுதமாய், அல்லாவியுள் கலந்த *
காரார் கருமுகில்போல், என்னம்மான் கண்ணனுக்கு *
நேராவாய் செம்பவளம், கண் பாதம் கை கமலம் *
பேராரம் நீண் முடி நாண், பின்னும் இழை பலவே. 2.5.5
பலபலவே ஆபரணம், பேரும் பலபலவே *
பலபலவே சோதி வடிவு, பண்பு எண்ணில் *
பலபல கண்டுண்டு, கேட்டுற்று மோந்தின்பம் *
பலபலவே ஞானமும், பாம்பணை மேலாற்கேயோ ? 2.5.6
பாம்பணை மேல் பாற்கடலுள், பள்ளி யமர்ந்ததுவும் *
காம்பணை தோள் பின்னைக்காய், ஏறுடனேழ் செற்றதுவும் *
தேம்பணைய சோலை, மராமர மேழெய்ததுவும் *
பூம்பிணைய தண்துழாய்ப், பொன்முடி யம் போரேறே. 2.5.7 திருப்பாற்கடல்
பொன் முடியம் போரேற்றை எம்மானை, நால் தடந்தோள் *
தன் முடிவொன்றில்லாத, தண் துழாய் மாலையனை *
என் முடிவு காணாதே, என்னுள் கலந்தானைச் *
சொல் முடிவு காணேன் நான், சொல்லுவது என் ? சொல்லீரே. 2.5.8
சொல்லீர், என்னம்மானை என்னாவி யாவிதனை *
எல்லையில் சீர், என் கருமாணிக்கச் சுடரை *
நல்ல அமுதம், பெறற்கரிய வீடுமாய் *
அல்லி மலர் விரை யொத்து, ஆணல்லன் பெண்ணல்லனே. 2.5.9
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன் *
காணலுமாகான், உளனல்லன் இல்லையல்லன் *
பேணுங்கால் பேணும், உருவாகும் அல்லனுமாம் *
கோணை பெரிதுடைத்து, எம்பெம்மானைக் கூறுதலே. 2.5.10
கூறுதலொன்றாராக், குடக் கூத்த அம்மானைக் *
கூறுதலே மேவிக், குருகூர்ச் சடகோபன் *
கூறின அந்தாதி, ஓராயிரத்துள் இப்பத்தும் *
கூறுதல் வல்லாருளரேல், கூடுவர் வைகுந்தமே. 2.5.11