திருவாய்மொழி
இரண்டாம் பத்து
எட்டாம் திருவாய்மொழி
அணைவது அரவணை மேல், பூம்பாவை யாகம்
புணர்வது * இருவரவர் முதலும், தானே *
இணைவனாம் எப்பொருட்கும், வீடு முதலாம் *
புணைவன், பிறவிக் கடல் நீந்துவார்க்கே. 2.8.1
நீந்தும், துயர்ப் பிறவி உட்பட மற்றெவ்வெவையும் *
நீந்தும், துயரில்லா வீடு முதலாம் *
பூந்தண் புனல் பொய்கை, யானை யிடர் கடிந்த *
பூந்தண் துழாய், என் தனிநாயகன் புணர்ப்பே. 2.8.2
புணர்க்கும் அயனாம், அழிக்கும் அரனாம் *
புணர்த்த தன்னுந்தியோடு ஆகத்து மன்னிப் *
புணர்த்த திருவாகித், தன்மார்வில் தான் சேர் *
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு, எங்கும் புலனே. 2.8.3
புலனைந்து மேயும், பொறி யைந்தும் நீங்கி *
நல மந்த மில்லதோர் நாடு புகுவீர் !*
அலமந்து வீய, அசுரரைச் செற்றான் *
பல முந்து சீரில், படிமின் ஓவாதே. 2.8.4
ஓவாத் துயர்ப் பிறவி உட்பட, மற்றெவ்வெவையும் *
மூவாத் தனிமுதலாய், மூவுலகும் காவலோன் *
மாவாகி ஆமையாய், மீனாகி மானிடமாம் *
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே. 2.8.5
தீர்த்தன், உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி * அவையே, சிவன் முடி மேல் தான் கண்டு *
பார்த்தன் தெளிந்தொழிந்த, பைந்துழாயான் பெருமை *
பேர்த்தும் ஒருவரால், பேசக் கிடந்ததே ? 2.8.6
கிடந்து இருந்து நின்று, அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் * தன்னுள் கரக்கும், உமிழும் *
தடம் பெருந் தோளாரத் தழுவும், பாரென்னும்
மடந்தையை * மால் செய்கின்ற மால், ஆர் காண்பாரே ? 2.8.7
காண்பாரார்? எம்மீசன் கண்ணனை, என் காணுமாறு ? *
ஊண் பேசில், எல்லா உலகும் ஓர் துற்றாற்றா *
சேண் பால வீடோ உயிரோ, மற்றெப்பொருட்கும்*
ஏண்பாலும் சோரான், பரந்துளனாம் எங்குமே. 2.8.8
எங்குமுளன் கண்ணனென்ற மகனைக், காய்ந்து *
இங்கில்லையா லென்று, இரணியன் தூண் புடைப்ப *
அங்கு அப்பொழுதே, அவன் வீயத் தோன்றிய * என்
சிங்கப் பிரான் பெருமை, ஆராயும் சீர்மைத்தே ? 2.8.9
சீர்மைகொள் வீடு, சுவர்க்கம் நரகீறா *
ஈர்மைகொள் தேவர் நடுவா, மற்றெப்பொருட்கும் *
வேர்முதலாய் வித்தாய்ப், பரந்து தனிநின்ற *
கார்முகில்போல்வண்ணன், என்கண்ணனை நான் கண்டேனே. 2.8.10
கண்தலங்கள் செய்ய, கருமேனி யம்மானை *
வண்டலம்பும் சோலை, வழுதிவளநாடன் *
பண்தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் *
விண்தலையில் வீற்றிருந்து, ஆள்வர் எம்மா வீடே. 2.8.11