திருவாய்மொழி
மூன்றாம் பத்து
இரண்டாம் திருவாய்மொழி
முந்நீர் ஞாலம் படைத்த, என்முகில் வண்ணனே ! *
அந்நாள் நீ தந்த, ஆக்கையின் வழி உழல்வேன் *
வெந்நாள் நோய் வீய, வினைகளை வேரறப் பாய்ந்து *
எந்நாள் யான் உன்னை, இனி வந்து கூடுவனே? 3.2.1
வன்மா வைய மளந்த, எம் வாமனா ! * நின்
பன்மாமாயப் பல்பிறவியில், படிகின்ற யான் *
தொன்மா வல்வினைத் தொடர்களை, முதலரிந்து *
நின்மாதாள் சேர்ந்து நிற்பது, எஞ்ஞான்று கொலோ? 3.2.2
கொல்லா மாக்கோல், கொலை செய்து * பாரதப் போர்
எல்லாச் சேனையும், இரு நிலத்து அவித்த எந்தாய் ! *
பொல்லா வாக்கையின் புணர்வினை அறுக்கலறா *
சொல்லாய், யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே. 3.2.3
சூழ்ச்சி ஞானச் சுடர், ஒளியாகி * என்றும்
ஏழ்ச்சிக் கேடின்றி, எங்கணும் நிறைந்த எந்தாய் ! *
தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து, நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி * யான் சேரும் வகை, அருளாய் வந்தே. 3.2.4
வந்தாய் போலே வந்தும், என் மனத்தினை நீ *
சிந்தாமல் செய்யாய், இதுவே இதுவாகில் *
கொந்தார் காயாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய் ! * யான் உன்னை, எங்கு வந்தணுகிற்பனே? 3.2.5
கிற்பன் கில்லேனென்றிலன், முனநாளால் *
அற்ப சாரங்கள் அவை, சுவைத்தகன்றொழிந்தேன் *
பற்பல்லாயிரம் உயிர் செய்த, பரமா! நின்
நற் பொற் சோதித் தாள், நணுகுவது எஞ்ஞான்றே? 3.2.6
எஞ்ஞான்று நாம் இருந்திருந்து, இரங்கி நெஞ்சே ! *
மெய்ஞ்ஞானமின்றி, வினையியல் பிறப்பழுந்தி *
எஞ்ஞான்றும் எங்கும், ஒழிவற நிறைந்து நின்ற *
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை, மேவுதுமே. 3.2.7
மேவு துன்ப வினைகளை, விடுத்துமிலேன் *
ஓவுதலின்றி, உன் கழல் வணங்கிற்றிலேன் *
பாவு தொல் சீர்க் கண்ணா ! என்பரஞ் சுடரே ! *
கூவுகின்றேன் காண்பான், எங்கெய்தக் கூவுவனே? 3.2.8
கூவிக் கூவிக், கொடுவினைத் தூற்றுள் நின்று *
பாவியேன் பலகாலம், வழி திகைத்து அலமருகின்றேன் *
மேவியன்று ஆநிரை காத்தவன், உலகமெல்லாம்
தாவிய அம்மானை * எங்கு, இனித் தலைப்பெய்வனே ? 3.2.9
தலைப் பெய்காலம், நமன்தமர் பாசம் விட்டால் *
அலைப்பூணுண்ணும், அவ்வல்லலெல்லாம் அகலக் *
கலைப்பல் ஞானத்து, என் கண்ணனைக் கண்டு கொண்டு *
நிலைப் பெற்று என்னெஞ்சம் பெற்றது, நீடுயிரே. 3.2.10
உயிர்களெல்லா, உலகமு முடையவனைக் *
குயில் கொள் சோலைத், தென்குருகூர்ச் சடகோபன் *
செயிரில் சொல்லிசை மாலை ஆயிரத்துள், இப்பத்தும் *
உயிரின் மேலாக்கை, ஊனிடை யொழிவிக்குமே. 3.2.11