திருவாய்மொழி
மூன்றாம் பத்து
மூன்றாம் திருவாய்மொழி
ஒழிவில் காலமெல்லாம், உடனாய் மன்னி *
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் *
தெழிகுரலருவித், திருவேங்கடத்து *
எழில்கொள் சோதி, எந்தை தந்தை தந்தைக்கே. 3.3.1 திருவேங்கடம் திருப்பதி
எந்தை தந்தை தந்தை, தந்தை தந்தைக்கும்
முந்தை * வானவர், வானவர் கோனொடும் *
சிந்து பூ மகிழும், திருவேங்கடத்து *
அந்தமில் புகழ்க், காரெழிலண்ணலே. 3.3.2 திருவேங்கடம் திருப்பதி
அண்ணல் மாயன், அணிகொள் செந்தாமரைக்
கண்ணன் * செங்கனிவாய்க், கருமாணிக்கம் *
தெண்ணிறைச் சுனைநீர்த், திருவேங்கடத்து *
எண்ணில் தொல் புகழ், வானவரீசனே. 3.3.3 திருவேங்கடம் திருப்பதி
ஈசன் வானவர்க் கென்பன், என்றால் * அது
தேசமோ, திருவேங்கடத்தானுக்கு ? *
நீசனேன், நிறைவொன்றுமிலேன் * என் கண்
பாசம் வைத்த, பரஞ்சுடர்ச் சோதிக்கே. 3.3.4 திருவேங்கடம் திருப்பதி
சோதியாகி, எல்லா வுலகும் தொழும் *
ஆதிமூர்த்தி யென்றால், அளவாகுமோ ? *
வேதியர் முழு வேதத்து, அமுதத்தைத் *
தீதில் சீர்த், திருவேங்கடத்தானையே. 3.3.5 திருவேங்கடம் திருப்பதி
வேங்(ம்) கடங்கள் மெய், மேல் வினை முற்றவும் *
தாங்கள் தங்கட்கு, நல்லனவே செய்வார் *
வேங்கடத் துறைவார்க்கு, நமவென்ன
லாம் கடமை * அது, சுமந்தார் கட்கே. 3.3.6 திருவேங்கடம் திருப்பதி
சுமந்து, மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு *
அமர்ந்து வானவர், வானவர் கோனொடும் *
நமன்றெழும், திருவேங்கடம் நங்கட்குச்*
சமன் கொள் வீடு தரும், தடங்குன்றமே. 3.3.7 திருவேங்கடம் திருப்பதி
குன்றமேந்திக், குளிர் மழை காத்தவன் *
அன்று, ஞாலம் அளந்த பிரான் * பரன்
சென்று சேர், திருவேங்கட மாமலை *
ஒன்றுமே தொழ, நம் வினை ஓயுமே. 3.3.8 திருவேங்கடம் திருப்பதி
ஓயு மூப்புப், பிறப்பு இறப்புப் பிணி *
வீயுமாறு செய்வான், திருவேங்கடத்து
ஆயன் * நாள் மலராம், அடித் தாமரை *
வாயுள்ளும் மனத்துள்ளும், வைப்பார்கட்கே. 3.3.9 திருவேங்கடம் திருப்பதி
வைத்த நாள் வரை எல்லை குறுகிச், சென்று *
எய்த்திளைப்பதன் முன்னம், அடைமினோ *
பைத்த பாம்பணையான், திருவேங்கடம் *
மொய்த்த சோலை, மொய் பூந்தடம் தாழ்வரே. 3.3.10 திருவேங்கடம் திருப்பதி
தாள் பரப்பி, மண் தாவிய ஈசனை *
நீள்பொழில், குருகூர்ச் சடகோபன் சொல் *
கேழிலாயிரத்து, இப்பத்தும் வல்லவர் *
வாழ்வர் வாழ்வெய்தி, ஞாலம் புகழவே. 3.3.11 திருவேங்கடம் திருப்பதி