திருவாய்மொழி
மூன்றாம் பத்து
ஆறாம் திருவாய்மொழி
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகேழும் உண்ட அவன் கண்டீர் *
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்ச்*
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப் பட்டிவை படைத்தான் *
பின்னும்மொய்கொள் சோதியோடாயினான் ஒருமூவராகியமூர்த்தியே. 3.6.1
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச் *
சாவ முள்ளன நீக்குவானைத் தடங்கடல் கிடந்தான் தன்னைத் *
தேவ தேவனைத், தென்னிலங்கை யெரியெழச் செற்ற வில்லியைப் *
பாவ நாசனைப், பங்கயத் தடங்கண்ணனைப் பரவுமினோ. 3.6.2
பரவி வானவரேத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியைக் *
குரவை கோத்த குழகனை மணிவண்ணனைக் குடக்கூத்தனை *
அரவமேறி அலைகடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை *
இரவும் நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ. 3.6.3 திருப்பாற்கடல்
வைம்மின்நும்மனத்தென்று யானுரைக்கின்ற மாயவன்சீர்மையை *
எம்மனோர்கள் உரைப்பதென்? அது நிற்க * நாள்தொறும்
வானவர் தம்மை யாளுமவனும், நான்முகனும் சடைமுடியண்ணலும் *
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்தேத்தித் திரிவரே. 3.6.4
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் *
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்க் *
கரிய மேனியன் செய்யதாமரைக்கண்ணன் கண்ணன் விண்ணோரிறை *
சுரியும் பல் கருங்குஞ்சி எங்கள் சுடர்முடி யண்ணல் தோற்றமே. 3.6.5
தோற்றக்கேடவையில்லவன் உடையான்அவன்ஒருமூர்த்தியாய்ச் *
சீற்றத்தோடருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால் *
நாற்றத் தோற்றச் சுவையொலி உறலாகி நின்ற * எம் வானவ
ரேற்றையே யன்றி, மற்றொருவரை யானிலேன் எழுமைக்குமே. 3.6.6
எழுமைக்கும் எனதாவிக்கு இன்னமுதத்தினை * எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக்கூத்தனை *
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனிய(யி)னைத் *
தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே. 3.6.7
துயரமே தரு துன்ப வின்ப வினைகளாய் அவை யல்லனாய் *
உயர நின்றதோர் சோதியாய் உலகேழும் உண்டுமிழ்ந்தான் தன்னை *
அயர வாங்கு நமன் தமர்க்கு அருநஞ்சினை, அச்சுதன் தன்னைத் *
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே. 3.6.8
தஞ்சமாகிய தந்தை தாயொடு தானுமாய், அவையல்லனாய் *
எஞ்சலில் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளுமாதியை *
அஞ்சி நீருலகத்துள்ளீர்கள் ! அவனிவனென்று கூழேன்மின் *
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள்கடல் வண்ணனே. 3.6.9
கடல்வண்ணன்கண்ணன் விண்ணவர்கருமாணிக்கம்எனதாருயிர் *
படவரவினணைக் கிடந்த பரஞ்சுடர் * பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்காகி வெஞ்சமத்து * அன்று தேர்
கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்களே? 3.6.10
கண்கள் காண்டற் கரியனாய்க்
கருத்துக்கு நன்று மெளியனாய் *
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெல்லாம்
அருள் செய்யும் வானவரீசனைப் *
பண் கொள் சோலை வழுதி நாடன்
குருகைக் கோன் சடகோபன் சொல் *
பண் கொளாயிரத்து இப்பத்தால்
பத்தராகக் கூடும் பயிலுமினே. 3.6.11