திருவாய்மொழி
மூன்றாம் பத்து
ஏழாம் திருவாய்மொழி
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப், பங்கயக் கண்ணனைப் *
பயில இனிய, நம் பாற்கடல் சேர்ந்த பரமனைப் *
பயிலும் திருவுடையார் யவரேலும், அவர் கண்டீர் *
பயிலும் பிறப்பிடை தோறு, எம்மை யாளும் பரமரே. 3.7.1 திருப்பாற்கடல்
ஆளும் பரமனைக் கண்ணனை, ஆழிப்பிரான் தன்னைத் *
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன், எம்மான் தன்னைத் *
தாளும் தடக்கையும் கூப்பிப், பணியுமவர் கண்டீர் *
நாளும் பிறப்பிடை தோறு, எம்மை யாளுடை நாதரே. 3.7.2
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் * பொன் நெடுஞ் சக்கரத்து, எந்தை பிரான் தன்னைப் *
பாதம் பண்ணிய வல்லாரைப், பணியுமவர் கண்டீர் *
ஓதும் பிறப்பிடை தோறு, எம்மை யாளுடையார்களே. 3.7.3
உடையார்ந்த ஆடையன், கண்டிகையன் உடை நாணினன் *
புடையார் பொன்னூலினன், பொன்முடியன் மற்றும் பல்கலன் *
நடையாவுடைத் திருநாரணன், தொண்டர் தொண்டர் கண்டீர் *
இடையார் பிறப்பிடை தோறு, எமக்கு எம்பெருமக்களே. 3.7.4
பெரு மக்களுள்ளவர் தம்பெருமானை * அமரர்கட்கு
அருமை யொழிய, அன்று ஆரமுதூட்டிய அப்பனை *
பெருமை பிதற்ற வல்லாரைப், பிதற்றுமவர் கண்டீர் *
வருமையும் இம்மையும், நம்மை யளிக்கும் பிராக்களே. 3.7.5
அளிக்கும் பரமனைக் கண்ணனை, ஆழிப்பிரான் தன்னைத் *
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன், எம்மான் தன்னை *
ஒளிக்கொண்ட சோதியை, உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர் *
சலிப்பின்றி யாண்டு, எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே. 3.7.6
சன்மசன்மாந்தரம் காத்து, அடியார்களைக் கொண்டு போய்த் *
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத் *
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர் *
நன்மை பெறுத்து எம்மை, நாளுய்யக் கொள்கின்ற நம்பரே. 3.7.7
நம்பனை ஞாலம் படைத்தவனைத், திருமார்பனை *
உம்பருலகினில் யார்க்கும், உணர்வரியான் தன்னைக் *
கும்பி நரகர்க ளேத்துவரேலும், அவர் கண்டீர் *
எம்பல் பிறப்பிடை தோறு, எம் தொழு குலம் தாங்களே. 3.7.8
குலம் தாங்கு சாதிகள் நாலிலும், கீழிழிந்து * எத்தனை
நலந்தானிலாத, சண்டாள சண்டாளர்களாகிலும் *
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு, ஆளென்று உள்
கலந்தார் * அடியார் தம்மடியார் எம்மடிகளே. 3.7.9
அடியார்ந்த வையமுண்டு, ஆலிலை யன்ன வசஞ் செய்யும் *
படியாதுமில் குழவிப்படி, எந்தை பிரான் தனக்கு *
அடியார் அடியார் தம்மடியார், அடியார் * தமக்கு
அடியாரடியார் தம் * அடியார், அடியோங்களே. 3.7.10
அடியோங்கு நூற்றுவர் வீய, அன்று ஐவர்க்கருள் செய்த
நெடியோனைத் * தென்குருகூர்ச் சடகோபன், குற்றேவல்கள் *
அடியார்ந்த ஆயிரத்துள் இவைபத்து அவன் தொண்டர் மேல்
முடிவு * ஆரக் கற்கிற்கில், சன்மம் செய்யாமை முடியுமே. 3.7.11